சிறுமி மீதான பாலியல் வன்புணர்வு: கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு பதினாறு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு பதினாறு வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்தியதுடன் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.
நீதிமன்ற உத்தரவு
இது தொடர்பில் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், இன்றைய தினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கானது இன்று(20-09-2023) பகல் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் அவர்கள் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
சிறுமியின் வாக்கு மூலமும் சாட்சியங்கள் மூலமும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் மன்று குறித்த நபரை குற்றவாளியாக இனம் கண்டு இன்றைய தினம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடூழிய சிறைத்தண்டனை
இவ்வாறு மேற்படி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு பத்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 24 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.