கிளிநொச்சியில் நபரொருவரை கத்தியால் குத்தி படுகாயம் விளைவித்த வழக்கு: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
கிளிநொச்சி - இராமநாதபுரம், அழகாபுரி பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி படுகாயம் விளைவித்த குற்றவாளிக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 24 மாத கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அழகாபுரி பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் திகதி நபர் ஒருவரை கத்தியால் குத்தி படுகாயத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேற்படி வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்றின் நீதிபதி ஏ.எம்.ஏ.சகாப்தீன் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது படுகாயம் ஏற்படுத்தியமைக்காக குற்றவாளிக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 24 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தீர்ப்பிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு தொடருனர் தரப்பின் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி என்.நிஷஜாந்த் மற்றும் எதிரி சார்பாக சட்டத்தரணி திருக்குமரன் ஆகியோர் முன்னிலையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |