இயற்கையோடு இயைந்த கற்றலே மாணவர்களை வலுவூட்டும்: சிறீதரன் (Photos)
இயற்கை நேயமிக்க பாடசாலைச் சூழலே மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக புத்தெழுச்சியூட்டி, அவர்களிடையே கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் உள்ளார்ந்த விருப்போடு ஈடுபடுவதற்கான தூண்டலை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கிளி/பேராலை சி.சி.த.க.பாடசாலையின் சிறுவர் விளையாட்டு முற்றத் திறப்புவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளைகளின் அடிப்படை எதிர்பார்ப்புகளுக்கேற்பவே பாடசாலைகளின் அகப்புறச் சூழல் கட்டமைக்கப்பட வேண்டும். அதுவே மகிழ்வான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும்.
கற்றல் சூழல்
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் பச்சிலைப்பள்ளிக் கோட்டத்தில் வெறுமனே முப்பத்தியிரண்டு (32) மாணவர்களோடு இயங்கும் ஆரம்பப் பாடசாலையான இப்பாடசாலை, தனது கட்டமைப்பு ரீதியாகக் கொண்டிருக்கின்ற கம்பீரத் தோற்றம், வனப்புமிகு பௌதீகச் சூழல் அதன் கவின்நிலை, கல்வித் தராதரம் என்பவை மாணவர்களுக்கு மகிழ்வளிக்கக்கூடிய கற்றல் சூழலை ஏற்படுத்தியுள்ளதை என்னால் அவதானிக்க முடிகிறது.
ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு மாணவர் எண்ணிக்கையோ, அதன் அமைவிடப் பிரதேசமோ தடையாகாது என்பதற்கு இப்பாடசாலையை நான் முன்னுதாரணமாகக் கருதுகிறேன்.
வழிகாட்டியாகக் கொள்ளல்
பாடசாலைகளின் பௌதீகச் சூழல் கட்டமைப்பு, கல்வி அடைவுமட்டம் என்பவற்றின் விளிம்பு நிலைக்கு மாணவர்களது எண்ணிக்கைக் குறைவைக் காரணம் காட்டும் பல பாடசாலைகளின் நிர்வாகங்களும், திணைக்கள மட்டங்களும் இந்தப் பாடசாலையைத் தமக்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலையின் அதிபர் நடராசா இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பச்சிலைப்பள்ளி கோட்டக்கல்விப் பணிப்பாளர் தி.திலீபன், பழைய மாணவர்களும் பாடசாலை நலன்விரும்பிகளுமான செல்லையா கனகரத்தினம், சிவகுரு செல்வராசா மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் அருள்ச்செல்வி கனகராசா, பெற்றோர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






