காற்றின் கொடூரத்தால் நூலிழையில் உயிர்தப்பிய கேப்பாப்புலவு போராட்டக்காரர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்று (03.07.2026) 10ஆவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், நேற்று பிற்பகல் திடீரென வீசிய பலத்த காற்றினால் போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகை முற்றாக சேதமடைந்துள்ளது.
அச்சமயம் கொட்டகைக்குள் இருந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நூலிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
மீட்கப்படும் வரை போராட்டம்
இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச் சேதமோ பாரிய காயங்களோ ஏற்படவில்லை என்றும், போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சில பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கின்றது.
குறித்த காணிகளை உடனடியாக உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே பாதிக்கப்பட்ட மக்கள் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையும் இயற்கை இடையூறுகளையும் எதிர்கொண்ட போதிலும், தமது காணிகள் மீட்கப்படும் வரை போராட்டத்தை தொடர்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு துன்ப துயரங்களை சுமந்து வரும் நிலையில் அரசாங்கம் இன்னும் கண்டு கொள்ளாத நிலையில் இருக்கிறது.
அதன் பலனாக ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். இன்னும் சாதகமான பதில் எட்டவில்லை.
இன்றுடன் 10 நாட்கள்
இதனால் நாளையதினம் (05.07.2026) காலை 9 மணிமுதல் ஒன்றிணைந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
இதற்கு அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி கலந்து ஆதரவினை வழங்குமாறு கேட்டு நிற்கின்றோம்.

இந்த காணி விடுவிப்பு இதற்கு முதல் ஆரம்பித்தது தொடக்கம் இன்று வரைக்கும் மூன்று ஆளுநர், மூன்று மாவட்ட செயலாளர்கள் மாறிவிட்டார்கள். யாருமே இதிலே அக்கறை கொள்ளவில்லை என்பது மனவேதனைக்குரிய விடயம்.
மீண்டும் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 10 நாட்கள். இந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதிகாரமுள்ள அதிகாரிகள் ஆளுநராக இருக்கட்டும் , மாவட்ட செயலாளராக இருக்கட்டும் , பிரதேச செயலாளராக இருக்கட்டும் இதுவரை மக்களுடைய துயரங்களை கண்டு அதற்கான தீர்வினை எங்களால் முயற்சி எடுக்கப்பட்டு பெற்றுத்தரப்படும் என்கின்ற ஒரு வார்த்தையை கூட கவனம் எடுத்து செயற்படுத்தாதது மிகவும் வேதனையளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.







