கெக்கிராவை சுதஸ்ஸன தேரர் துறவறத்திலிருந்து நீக்கம்
தேசிய மக்கள் சக்தியின் பிரதான விமர்சகர்களில் ஒருவரான கெக்கிராவை சுதஸ்ஸன தேரர், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துறவறத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கெக்கிராவை சுதஸ்ஸன தேரர், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வர முன்னதாக அக்கட்சியின் தீவிர ஆதரவாளராகவும், பிரச்சாரப் பேச்சாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.
எனினும் பின்வந்த காலங்களில் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் பிரதான விமர்சகர்களில் ஒருவராக மாறிப் போயிருந்தார்.
பொருத்தமற்ற வார்த்தை
அதற்காக அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் பௌத்த துறவிகளுக்கு பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் என்ற விமர்சனமும் எழுந்திருந்தது.

அதன் காரணமாக அவரை பௌத்த சாசனத்தில் (துறவறத்தில்) இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி ஏந்தியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் பௌத்த தர்மத்தின் சிற்சில நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தியதாக தெரிவித்து, கெக்கிராவை சுதஸ்ஸன தேரரை மகாசங்கத்திலிருந்து -துறவறத்தில் இருந்து- உடனடியாக நீக்குவதாக ராமயண நிகாய உயர்பீடம் அதிரடியாக அறிவித்துள்ளது.
பௌத்த நம்பிக்கை
இந்தியாவில் பிறந்த புத்தர் வான் வழியாக இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பதைப் போன்ற சிற்சில பௌத்த நம்பிக்கைகளை குறித்த தேரர் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.

அவ்வாறான அவரது தர்மபோதனைகள் பௌத்த மக்களை தவறாக வழிநடத்தும் தன்மை கொண்டவை என்று குற்றம் சாட்டப்பட்டே தற்போது அவர் துறவறத்தில் இருந்து நீக்ககப்பட்டுள்ளார்.
இதற்கிடையே ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான ராஜாங்கனே சத்தாதிஸ்ஸ தேரரும் தனது காவியுடையைக் களைந்து சாதாரண வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்துள்ளார்.