கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது
சட்டவிரோதமான முறையில் மற்றும் முறையான அனுமதியின்றி சுமார் இருபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகளை கொண்டு வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11) அதிகாலை சுங்க அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், விமானம் மூலம் பல்வேறு மருந்துகளை கடத்தி, நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்துக்கடைகள் மற்றும் வைத்தியசாலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த இவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல். 174 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மருந்துப்பொருட்கள் பறிமுதல்
குறித்த நபர் சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இந்த மருந்துப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த மருந்துகளில், ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும் மருந்துகள், பெண்களின் தோலை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் க்ரீம்கள் உட்பட பல வகையான மருந்துகளை அவர் தனது பொதியில் மறைத்து வைத்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் பத்மினி குமாரிஹாமியின் அறிவுறுத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மருந்துப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் இவற்றைக் கொண்டு வந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |