வெகுசிறப்பாக நடந்த கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய திருவிழா
யாழ். கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதாவின் திருத்தலத்தின் மாபெரும் திருவிழாவான ஆவணி மாத திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த திருவிழா, இன்று(15) ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க கப்பலேந்தி மாதாவின் ஆலய திருவிழாவானது புதிதாக நிறுவப்பட்ட கப்பலேந்தி மாதாவின் திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் ஆரம்பமானது.
திருவிழா திருப்பலி
இந்தத் திருவிழா திருப்பலியானது கட்டைக்காடு பங்கு தந்தை வன பிதா அமல்ராஜ் தலைமையில் ஆரம்பமாகியதுடன் கூட்டுத் திருப்பலியாக திருவிழா திருப்பலியானது ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித கப்பலேந்தி மாதாவின் திருச்சொரூப பவனியும், அதனைத் தொடர்ந்து கப்பலேந்தி மாதாவின் ஆசீர்வாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இலங்கை முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமான கொடியேற்றத்தை தொடர்ந்து 6ஆம் திகதி நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று, நேற்றையதினம் நற்கருணை திருவிழா திருப்பலியானது அருட்தந்தை அமல்ராஜ் தலைமையில் அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ அடிகளரால் ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







