இந்திய முப்படையின் தீவிர தயார்நிலை.. வலுக்கும் காஷ்மீர் தாக்குதல் விவகாரம் !
காஷ்மீர் - பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மத்தியில், அதற்கான இலக்குகள் மற்றும் நேரத்தைத் தீர்மானிக்க முப்படைகளுக்கு இந்திய பிரதமர் மோடி, முழுமையான சுதந்திரத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி, பாதுகாப்பு படைகளின் முக்கிய தளபதிகளுடன் நடந்த ஆலோசனை கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான அடி கொடுப்பது நமது தேசிய உறுதிப்பாடு என்றும், இந்திய ராணுவத்தின் மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பதிலடி
அதேவேளை, உள்விவகார அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆளும் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பிரதமரின் இல்லத்தில் ஆலோசனை முன்னெடுத்துள்ளனர்.
2019, பெப்ரவரியில் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிக மோசமான சம்பவம் பஹல்காம் தாக்குதல் என்றே கூறப்படுகிறது. இதனால், இராணுவ நடவடிக்கை உறுதி என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திரட்டப்பட்ட தரவுகள் அனைத்தும் மீண்டும் பாகிஸ்தானை குறிவைப்பதாக பாதுகாப்பு முகமைகள் அனைத்தும் தெரிவித்துள்ளன. அத்துடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கும் இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விசா இரத்து
இது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீது ஏற்கனவே பல தூதரக கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. பாகிஸ்தானிய இந்துக்கள் மற்றும் நீண்டகாலம் தங்க அனுமதி பெற்றவர்களைத் தவிர, பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை இந்திய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்ட விசாக்களையும் இந்தியா இரத்து செய்துள்ளது. மேலும், விசா இரத்து உத்தரவு முதன்முதலில் பிறப்பிக்கப்பட்ட வியாழக்கிழமை முதல், கிட்டத்தட்ட 1,000 பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
பாகிஸ்தானும் விசாக்களை இரத்து செய்ததுடன், சிம்லா ஒப்பந்தம் போன்ற பிற இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளமை இரு நாடுகளுக்கிடையில் பதற்றநிலையை அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
