15 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே நிறுத்தப்பட்ட அணுமின் மையம்
உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜப்பானின் காஷிவாசாகி - கரிவா (Kashiwazaki - Kariwa) அணுமின் நிலையம், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தொழிநுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு புகுஷிமா அணு உலை விபத்திற்கு பிறகு, இந்த அணுமின் நிலையத்தில் உள்ள 6வது உலை முதன்முதலாக நேற்று மீண்டும் இயக்கப்பட்டது.
இருப்பினும், இன்று காலை உலைச் செயல்பாடுகளின் போது திடீரென எச்சரிக்கை ஒலி (Alarm) ஒலித்ததால், பாதுகாப்பு கருதி அதன் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டன.
கதிர்வீச்சு கசிவு இல்லை
இந்த விபத்து குறித்து மின் நிலையத்தை இயக்கும் டெப்கோ (Tepco) நிறுவனம் கூறுகையில், அணு உலை தற்போது சீராகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாகவும் கதிர்வீச்சு கசிவு எதுவும் ஏற்படவில்லை, சுற்றுப்புறச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை, எச்சரிக்கை ஒலி ஒலித்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பானில் இருந்த 54 அணு உலைகளும் மூடப்பட்டன. மின் பற்றாக்குறையைத் தவிர்க்கவும், 2050க்குள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் ஜப்பான் மீண்டும் அணுமின் நிலையங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
மக்கள் கடும் எதிர்ப்பு
இதுவரை 33 உலைகளில் 15 உலைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. எனினும் காஷிவாசாகி - கரிவா அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக கடந்த வாரம் டெப்கோ தலைமையகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிநுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, அடுத்த மாதம் முதல் இந்த அணுமின் நிலையம் வணிக ரீதியாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam