கார்த்திகைப்பூ விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவில் பொலிஸாரின் வாக்குமூலம்
யாழ்.தெல்லிப்பழை கல்லூரி கார்த்திகைப்பூ விவகாரத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை விசாரணை செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய போதே இவ்வாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகை பூ அலங்காரம் செய்யப்பட்டமை தொடர்பில், மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மேலதிக நடவடிக்கை
இது தொடர்பில், ஆசிரியர் சங்கத்தினால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிரதேச அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிரதேச அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு பதில் முன்னிலையான பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சம்பவம் தொடர்பிலான வாக்கு மூலத்தினை வழங்கியுள்ளார்.
இதன்போது, தமக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலுக்கமையவே மாணவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதேச இணைப்பாளர் இது குறித்த மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |