நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி ஆரம்பம்!
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்முற்றம் திடலில் கார்த்திகை வாசம் என்ற மலர்க்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை (18.11.2022) கார்த்திகைப்பூச்சூடி கோலாகலமாக இக்கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன் கலந்துகொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாகச் சமூகச் செயற்பாட்டாளர் ம. இரேனியஸ் செல்வின், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ச. ரவி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதன்போது நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா குழுவினரின் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் இக்கண்காட்சி இம்மாதம் 27ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் மாணவர்களுக்கும் ஆலயங்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
இதேவேளை, கார்த்திகைப்பூவை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளின் அடையாளமாகவே பார்க்கிறது. கார்த்திகைப்பூவை ஏன் முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுத் துறையினர் என்னிடம் கேட்டு வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள்.
கார்த்திகைப்பூவை விடுதலைப் புலிகள் தேசியமலராகத்
தெரிவுசெய்திருந்தார்கள் என்பதால் அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ
அல்ல. அது தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம். அந்தவகையில், அது
தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளம் ஆகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்
தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.