பல்வேறு பகுதிகளில் மீட்க்கப்பட்ட போதைப்பொருட்கள்: பொலிஸாரின் தீவிர நடவடிக்கை
நாட்டில் பல்வேறு பகுதிகளில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் ஊரி பகுதியில், கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தும் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (08.11.2022), ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரண் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீட்க்கப்பட்ட கோடா
இந்தக் கைது நடவடிக்கையில், 56 வயது பெண் ஒருவரும் 20 வயது ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 7,500 மில்லிலீட்டர் கோடாவும், 56 வயதுப் பெண்ணிடமிருந்து 1,500 மில்லிலீட்டர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு சிறுவர் நீதிமன்றத்தில் திறந்த பிடியாணை ஒன்று உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: கஜிந்தன்
கிளிநொச்சி
கிளிநொச்சி, பாரதிபுரத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடமிருந்து 21 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 49 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் நேற்று (09.11.2022) கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்தி: ராகேஷ்
தம்பலகாமம்
கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் ஹெரோயின் போதைபொருளுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உயிர்கொல்லி ஹெரோயின் பாவனை இடம்பெறுவதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று (09.11.2022) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களின் வீட்டை சுற்றிவளைத்த போது 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: யது




