காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினரும் பல தடவைகள் என்னிடம் முறைப்பாடு முன் வைத்தனர். இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும் நான் பல தடவை கூறியுள்ளேன் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இன்று(26.03.2026) காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விதமான அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் மக்களது பிரச்சினைகளும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
நீலங்காடு காணி பிரச்சினை தொடர்பில் ஆராய்வு
குறிப்பாக கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள நீலங்காடு காணி பிரச்சினை, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் தொடர்பான பிரச்சனைகள், குழாய்வழி குடிநீர் பிரச்சினை, பாடசாலைகளின் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

தாதியர் பற்றாக்குறை
ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காரைநகர் பிரதேச செயலர், திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், கடற்படையினர், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா கருத்து தெரிவிக்கையில், அந்த வைத்தியசாலையை தரம் உயர்த்தும் போது அங்கே பணி நியமன திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

அதாவது எத்தனை வைத்தியர்கள் இருக்க வேண்டும், எத்தனை தாதியர்கள் இருக்க வேண்டும், எத்தனை ஊழியர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு வந்தால் தான் நாங்கள் சுகாதார உத்தியோகத்தரை கேட்கலாம்.
நாங்கள் அது குறித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வைத்தியசாலை 24 மணித்தியாலமும் இயங்க வேண்டும் என்றால் ஆகக் குறைந்தது எட்டு தாதியர்கள் அங்கே பணியாற்ற வேண்டும்.
ஆக அதற்குரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும். நாடளாவிய ரீதியில் எல்லா வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை காணப்படுகிறது. ஆகவே அதனை நிவர்த்தி செய்த பின்னர் இந்த வைத்தியசாலையை இயங்க வைப்போம் என்றார்.