ஈரான் தீவுகளை ஆக்கிரமிக்க இரகசிய முயற்சி: உளவுத்துறை தகவல்களினால் கடும் எச்சரிக்கை
ஈரானிய தீவு ஒன்றைக் கைப்பற்ற "எதிரிகள்" திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அத்தகைய முயற்சிக்கு உதவி வழங்கும் பிராந்திய நாடுகளின் உட்கட்டமைப்புகள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) இது குறித்துத் தெரிவிக்கையில்,
ஈரான் நேரடி தாக்குதல்
எந்தவொரு நாடாவது ஈரானிய தீவுகளை ஆக்கிரமிக்க உதவி வழங்கினால், அந்த நாட்டின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரான் நேரடித் தாக்குதல்களை நடத்தும்.

ஈரானியப் படைகள் எதிரிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. ஒரு சிறிய தவறு நடந்தாலும் "நரகத்தை" சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறினாலும், வெள்ளை மாளிகை கடுமையான மிரட்டல்களை விடுத்துள்ளது:
வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) கூறுகையில்,
"ஈரான் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இதற்கு முன் எப்போதும் சந்தித்திராத அளவு கடுமையான தாக்குதல்களை ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் சந்தேகம்
அமெரிக்கா இந்தத் தீவைக் கைப்பற்ற இலக்கு வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உதவக்கூடும் என ஈரான் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஈரான் தனது நிலப்பகுதிகள் அல்லது தீவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், செங்கடல் பகுதியில் புதிய போர் முனையைத் திறப்போம் என எச்சரித்துள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் இந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஈரான் திட்டமிட்டுள்ளது. சுமார் 2,000 அமெரிக்க வான்வழிப் படை வீரர்கள் (82nd Airborne Division) மற்றும் கடற்படைப் பிரிவுகள் பாரசீக வளைகுடாப் பகுதியை நோக்கி விரைந்துள்ளன.
மறைமுகமாகச் சில இராஜதந்திர முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன: அமெரிக்கா 15 அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
ஈரான் போரை நிறுத்த 5 நிபந்தனைகளை விதித்துள்ளது. இருப்பினும், கள யதார்த்தம் ஒரு பாரிய போரை நோக்கியே செல்வதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.