20 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி.. கடும் சிரமத்தில் மக்கள்
கந்தளாய் பேராறு 129/1 வீதி கடந்த இருபது வருடங்களாக எவ்வித புனரமைப்பும் இன்றி குன்றும் குழியுமாக காணப்படுவதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த வீதியை தினசரி பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் பலமுறை தங்களே நிதி திரட்டி தற்காலிகமாக செப்பனிட முயற்சி செய்துள்ளதுடன், அது நீடித்த தீர்வாக அமையவில்லை.
மக்கள் பாதுகாப்பு
முறையான வடிகால் அமைப்பு இல்லாததும், தார் இடப்படாததும் காரணமாக மழைக்காலங்களில் வீதி சேறும் சகதியுமாக மாறுகிறது மேலும், இரவு நேரங்களில் வீதி விளக்குகள் இல்லாததால் மக்கள் பாதுகாப்பு அச்சத்திலும் வாழ்கின்றனர்.

பேராறு மேற்கு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்கள் இருந்தபோதிலும், குறித்த வீதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கந்தளாயின் பல பகுதிகளில் வீதி அபிவிருத்தி மற்றும் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், 129/1 வீதி மட்டும் திட்டமிட்டபடி புறக்கணிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அரசியல் ரீதியான விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் வீதிப் பணிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, மக்களின் அடிப்படைத் தேவையாக இருக்கும் இந்த வீதியை உடனடியாகப் புனரமைத்து, வீதி விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.