கந்தளாய் பள்ளிவாசல் வயல் காணி செய்கை இடைநிறுத்தம்: தனிநபர்களின் தலையீட்டால் நஷ்டம் ஏற்படும் அபாயம்
கந்தளாய் - பேராற்று வெளி ஜும்மா பள்ளிவாசலுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் வயல் காணியைச் செய்கை பண்ணுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை காரணமாக, பள்ளிவாசலுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் தடைப்படும் நிலை உருவாகியுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாரி காலப் போகத்தின் போது, குறித்த இரண்டு ஏக்கர் வயல் காணியையும் இருவர் பொறுப்பேற்று, அதற்கான முழுச் செலவுகளையும் தமது சொந்தப் பணத்திலிருந்து ஈடு செய்து வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளனர்.
இடைநிறுத்தப்பட்ட காணி செய்கை
அதன் மூலம் கிடைத்த நெல் மூட்டைகளை அவர்கள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி பள்ளிவாசலுக்கு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது ஆரம்பமாகியுள்ள சிறுபோக (கோடை) செய்கைக்காகவும் குறித்த நபர்கள் பள்ளிவாசல் வயலைச் செய்வதற்கு முன் வந்தனர்.

எனினும், அங்குள்ள சில தனிநபர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தாங்களே அந்த வயலைச் செய்து தருவதாகக் கூறி தடையாக இருந்துள்ளனர்.
இதன் காரணமாக, முன்னதாக வெற்றிகரமாக வயல் வேலைகளைச் செய்தவர்கள் தற்போது ஒதுங்கியுள்ளனர். ஆனால், 'நாங்கள் செய்கிறோம்' என்று பொறுப்பேற்ற நபர்கள் இதுவரை வயல் வேலைகளை ஆரம்பிக்கவோ அல்லது அதற்கான செலவுகளைப் பொறுப்பேற்கவோ முன்வரவில்லை எனத் தெரியவருகிறது.
வருமானம் தடைப்படும் அபாயம்
சொந்தப் பணத்தைச் செலவு செய்து, பள்ளிவாசலுக்கு லாபத்தைப் பெற்றுக்கொடுக்க முன்வந்தவர்களைத் தடுத்து நிறுத்தியவர்களின் செயலால், தற்போது பள்ளிவாசல் வயல் செய்கை பண்ணப்படாமல் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளிவாசலுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்படுவதுடன், காணி பாழாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் ஊர் பெரியார்கள் தலையிட்டு, தகுந்த முடிவெடுத்து பள்ளிவாசலின் நலனை உறுதிப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்களும் நலன் விரும்பிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹோர்மூஸ் அருகே வெடித்து சிதறிய அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானம்! அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஈரான்..