கல்வி சீரமைப்பின் ஊடாக புதிய மாற்றங்களை உருவாக்க இருக்கின்றோம் - கந்தசாமி பிரபு எம்.பி தெரிவிப்பு
இந்த நாட்டில் புதிய ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்று புதிய கல்வி சீரமைப்பு ஊடாக புதிய மாற்றங்களை உருவாக்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கல்வி சீரமைப்பு குறித்து எதிர்ப்பினை தெரிவிக்கின்றவர்களுக்கு சரியான புரிதல் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (01.02.2026) நடைபெற்றிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஊழல் மோசடிகள்
மேலும் தெரிவிக்கையில், எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர் பல ஊழல் மோசடிகள் நிறைந்த ஒரு நாடாக காணப்பட்டது. இப்போது நாங்கள் இந்த ஊழல் மோசடிகள், இலஞ்ச ஊழல்களை வெகுவாக குறைத்து வருகிறோம். ஊழல் மோசடி குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டிருக்கிறது.
வெகு விரைவில் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையினை செய்து வருகிறோம். டிஜிட்டல் மயமாக்கல் தொழில்நுட்பம் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு கொள்கையாக இருக்கின்றது, எமது அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரம் எனும் ஒரு அமைச்சினை உருவாக்கி அதனூடாக பல நல்ல விடையங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதில் விசேடமாக Gopay என்ற அப்பினையும் உருவாக்கியுள்ளோம். தற்போது வீட்டில் இருந்தவாறே அரச துறைக்கான கட்டணங்களைச் செலுத்தி தமக்கான சேவையினை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான தொழிநுட்ப வசதியை எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல்
அது மட்டுமல்லாது உங்கள் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழினை கூட வீட்டில் இருந்தவாறு பெற்றுக்கொள்வதற்கான தொழிநுட்ப வசதியை நாம் தற்போது ஏற்படுத்தியுள்ளோம். அதனையும் தாண்டி தற்போது போக்குவரத்து பொலிஸாரின் தண்டப்பணங்களை கட்டுவதற்காகவும் டிஜிட்டல் மயமாக்கல் உருவாக்கியுள்ளோம்.
எம்மை அண்மித்த இந்தியா போன்ற நாடுகளில் புதிய தொழில் நுட்பங்களின் ஊடாக தங்களது சேவைகளை விஸ்தீரணம் செய்திருக்கின்றார்கள். பொருளாதார ரீதியாக அந்த நாடுகள் முன்னேற்றம் காண்பதற்கு அந்த தொழில்நுட்பமும் முக்கிய வகிபாகம் கொண்டுள்ளது.
அதனைப் போன்று நாங்களும் எமது நாட்டில் இவ்வாறான தொழிநுட்ப முறைமைகளை கையாண்டு நாட்டை ஒரு வளர்ச்சிப் பாதைக்கு மாற்றுவதுதான் எமது நோக்கமாக இருக்கிறது. இன்று எமது அரசால் புதிதாக உருவாக்கியிருக்கின்ற கல்வி சீர்திருத்தம் தொடர்பான விடயம் ஒரு பேசு பொருளாகக் கொண்டு வருகிறது.
இந்த நாட்டில் புதிய ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்ற கல்வி முறையிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது தான் எமது அரசின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.


லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri