கந்தளாய் சூரியபுர மகாவலி அணைக்கட்டு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்
அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கந்தளாய் சூரியபுர மகாவலி அணைக்கட்டு (Bund) உடைந்து ஏற்பட்ட பாரிய வெள்ளச் சேதங்களைப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பார்வையிட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த இடத்திற்கு இன்றையதினம்(4) அருண் ஹேமச்சந்திர மற்றும் ரொசான் அக்பிம ஆகியோர் அதிகாரிகளுடன் வருகை தந்தனர்.
மகாவலி அணைக்கட்டு (Bund) உடைக்கப்பட்டதன் விளைவாக, அப்பகுதியில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளச் சேதம்
இதன் காரணமாக, கீழ் உள்ள பல கிராமங்கள் கடுமையான வெள்ளச் சேதங்களை எதிர்கொண்டு முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.

இந்த உடைப்பினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கியுள்ள விவசாயிகள் மற்றும் கிராமங்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் நாசம் அடைந்துள்ளன.
நிவாரணப் பணிகள்
பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்பிம செய்தியாளர்களிடம் பேசும்போது, " மேலும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்குவோம்.

மேலும், விரைவில் குறித்த அணைக்கட்டை (Bund) மீள் நிர்மாணம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவோம்" என்று உறுதியளித்தார்.