தமிழரசுக் கட்சி நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த கந்தசாமி பிரபு
தமிழ் மக்களின் உரிமைமைய நோக்கிச்சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியானது இன்று பதவியாசைக்கும் கதிரைப்போட்டிக்குமான கட்சியாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இன்று(29.01.2026) களுவாஞ்சிகுடியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிதரனுக்கு எதிரான நடவடிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற குழத்தலைவர் சிறிதரனுக்கு எதிராக தங்களது கட்சிக்குள்ளே குழப்ப நிலையினை ஏற்படுத்திக் கொண்டு அவரை அரசியலமைப்பிலிருந்து விலகவேண்டும் என்ற விடயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியிலிருந்தும் அவரை விலக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களின் உட்கட்சி பூசல் என்பது தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவர்களுக்கு பின்னர் தமிழ் மக்கள் அணிதிரள்வார்களா என்ற சந்தேகம் இன்று எழுந்துள்ளது.
மேலும், ஏனைய கட்சிகள் தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடும் போது தமிழரசுக்கட்சியானது அடிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலைமையை காணக்கூடியதாகவுள்ளது.
இன்று வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தளம் அதிகரித்து வருகின்றது.
மாகாணசபை தேர்தல்
தற்போது, வடமாகாண மக்கள் தேசிய மக்கள் சக்தியையும் ஜனாதிபதினையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டிலே ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டும் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துள்ளனர்.
இன மத வேறுபாடுகள் கடந்து தேசிய மக்கள் சக்தியுடன் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய அரசியலமைப்பு தொடர்பாக தேர்தல் காலங்களில் வாக்குறுதியொன்றினை வழங்கியிருந்தோம்.

இது தொடர்பான முன்னெடுப்புகளையும் அரசாங்கம் முன்னெடுத்தது. ஆனால் டிட்வா புயல் இந்த நாட்டில் ஏற்படுத்திய அழிவுகள் காரணமாக நாடு பின்தங்கிய நிலையினை அடைந்துள்ளது. அதிலிருந்து நாட்டை மீளகட்டியெழுப்பும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
விரைவில் புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.