கந்தளாய் சீனிபுர பகுதியில் சோளப் பயிரில் படைப்புழுவின் தீவிரத் தாக்கம்
திருகோணமலை - கந்தளாய் சீனிபுரப் பகுதியில், பல ஏக்கர் கணக்கிலான சோளப் பயிர்செய்கையில் படைப்புழுவின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது சோளப் பயிர்கள் கதிர் வருகின்ற நிலையிலேயே இந்தப் படைப்புழுத் தாக்குதல் அதிகரித்திருப்பது, பெருமளவில் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
கந்தளாய் பிரதேசத்தின் அக்போபுர, ஜெயந்திபுர, சீனிபுர உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விரிவாக சோளப் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில்,
“படைப்புழுவின் பரவலைக் கட்டுப்படுத்த பல வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தும் எந்தவித பலனும் இல்லாத நிலையில் உள்ளோம். மருந்துகளைப் பயன்படுத்திய பின்னரும் தாக்கம் குறையாததால், செய்கை முழுவதும் அழிவடையும் அபாயம் உள்ளது” என அவர்கள் கவலையுடன் கவலையுடன் தெரிவித்தனர்.
கள ஆய்வு
இந்தத் தீவிரப் படைப்புழு, சோளத்தின் குருத்துப் பகுதியையும் கதிர்களையும் தாக்குவதால், விவசாயிகள் முதலீடு செய்த பணமும் உழைப்பும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சோளப் பயிர்ச்செய்கையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், வேளாண்மைத் திணைக்களம் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளையும், புதிய வீரியம் மிக்க இரசாயனப் பரிந்துரைகளையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






