தமிழர் பகுதியில் தத்தழிக்கும் பொதுச் சந்தைத் தொகுதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் மாத்திரம் செறிந்து வாழும் பகுதியே பட்டிருப்புத் தொகுதியாகும்.
இது மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் மேற்கு என பெரும் 3 பிரதேச செயலாளர் பகுதிகளையும், 105,289 இற்கு மேற்பட்ட வாக்காளர்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
அதில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 60 கிராமங்களையும், 45 கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவுகளையும், 63000 இற்கு மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.
பொதுமக்கள கவலை
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 120 கிராமங்களையும் 43 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும், 46000 இற்கு மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டமைந்துள்ளது.அதுபோல் மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் 39 கிராமங்களையும், 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும், 24000 இற்கு மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டமைந்துள்ளது.
இத்தொகுதியில், பிரபல தேசிய பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், வைத்தியசாலைகள், என பல வரலாறுகளைக் கொண்டமைததாக இந்த பட்டிருப்புத் தொகுதி காணப்படுகின்றது.இந்தநிலையில் பட்டிருப்புத் தொகுதியின் வர்த்தக கேந்திர நிலையமாக விளங்குவதுதான் களுவாஞ்சிகுடி நகர் பகுதியாகும்.
களுவாஞ்சிகுடிக்கு பல இடங்களிலுமிருந்து வந்து செல்லும் மக்கள் அங்கு அமைந்துள்ள சந்தைத் தொகுதிக்கும் சென்று தமது அன்றாட பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டே செல்கின்றார்கள்.
ஆனாலும் அந்த பொதுச் சந்தைத் தொகுதியில் பல்வேறுபட்ட அடிப்படை வசதிகளற்ற நிலையிலும், அதில் அமைந்துள்ள மேற்புறத்திலே அமைந்துள்ள கடைத்தொகுதி அழுக்கடைந்து துர்நாற்றம் வீசி வருவதாகவும், சந்தை தொகுதியை சுற்றி காணப்படும் வடிகான்கள் அழுக்கடைந்த துர்நாற்றம் வீசி வருவதாகவும், பொதுச் சந்தையில் மிக நீண்ட நாட்களாகவிருந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளும், சந்தைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
களுவாஞ்சிகுடி பொது சந்தை தொகுதிக்குரிய புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த கட்டடத்திற்குரிய முறையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவில்லை. களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக்கு இதுவரையில் முறையான பிரதான வாயிற்கதவு அமைக்கப்படவில்லை.
வியாபாரம் செய்யும் பகல் வேளையிலும் கூட நாய்களும் மாடுகளுமாக கால்நடைகள் மக்களோடு மக்களாக நிறைந்தாகவே இந்தச் சந்தை காணப்படுகின்றது. எனத் தெரிவிக்கும் அங்குள்ள வர்த்தகர்கள், அண்மையில் பெய்த மழைக்கு கட்டடத்தில் அமையப்பெற்றுள்ள கூரையினால் நீர் வடிந்து எமது கடைத் தொகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து விட்டது.
அண்மையில் சந்தைக்கு வருகைத ந்திருந்த கர்ப்பிணி தாய் ஒருவரும் இவ்விடத்தில் சறுக்கி விழுந்த சம்பவத்தை நாம் நேரில் கண்டோம். மழை பெய்தால் மழைநீர் அனைத்தும் எமது கடைத்தொகுதிக்குள்ளேயே வந்து விழுகின்றன. மாறாக மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள் அடிக்கடி வந்து இவை அனைத்தையும் பார்வை விட்டு செல்கின்றார்கள் ஆனால் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை.
அவர்களிடம் விடயங்களை தெரிவிக்கும் போது எம்முடன் கோபமாகவும் நடந்து கொள்கின்றார்கள். உங்களுடைய வேலையை நீங்கள் பாருங்கள் எங்களுடைய வேலையை நாங்கள் பார்க்கிறோம் என தெரிவித்துவிட்டு அந்த உத்தியோகத்தர்கள் செல்கின்றாரகள். நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கின்றார்கள். ஆனால் இதுவரையில் அவர்கள் இதனை பூர்த்தி செய்து தரவில்லை.
உரிய வசதி வாய்ப்புகள்
நான் எனது புடவை கடையை மூடிவிட்டு செல்லலாம் என நினைத்துள்ளேன். ஏனெனில் நான் அதிகளவு முதலீடுகளை செய்து புடவைகடை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றேன். எனினும் எமக்குரிய வசதி வாய்ப்புகளையும், மக்கள் இலகுவில் வந்து துணிகளை கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்குரிய வசதிகளை பிரதேச சபையினர் செய்து தராமையினால் எனது தொழிலை நான் கைவிடலாம் என தீர்மானித்திருக்கிறேன்.
இந்த கடைக்காக வேண்டி நான் 10 லட்சம் ரூபாய் முற்பணமாக செலுத்தியுள்ளேன். மாதாந்தம் 7500 ரூபாய் வடகை செலுத்தி வருகின்றேன். மின்சார இணைப்புக்காக 10000 செலுத்தியுள்ளேன், ஆனலும் உரியமுறையில் எனக்குரிய மின்னிணைப்பை அவர்கள் இதுவலையில் தரவில்லை.
இன்னும் மூன்று மாதத்திற்குள் அவர்கள் இவற்றைப் பூர்த்தி செய்து தரவில்லை என்றால் நான் எனது தொழிலை நிறுத்திக் கொள்ளலாம் என தீர்மானித்திருக்கின்றேன் என களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் மிக நீண்ட காலமாக புடவைக் கடைதொழிலில் ஈடுபட்டு வரும் நடராசா என்பவர் தெரிவிக்கின்றார்.
நடராசாவின் கருத்து இவ்வாறு அமைகின்ற இந்தநிலையில் பொதுச் சந்தைக்குரிய புதிய கட்டடத்தை அமைத்து தந்த பின்னர் நீர் வழிந்து ஓடுவதற்காக வைக்கப்பட்ட பீலிக்கு வெளியே மழைநீர் வருகின்றது. பொதுச் சந்தையின் நுழைவாயில் முறையாக அமையவில்லை.
போக்குவரத்துக்குரிய வீதி கட்டமைப்பு அமையப்படவில்லை. நீர் வழிந்து ஓடுவதற்கு உரிய வசதி வாய்ப்புகள் செய்து தரப்படவில்லை இதனால் கடைகளுக்குள்ளேயே மழை நீர் உட்புகுந்து வருகின்றன. சந்தைக்கு வரும் மக்கள் தடக்கியும், சறுக்கியும் விழுந்து செல்லக்கூடிய நிலைமைதான் காணப்படுகின்றன.
பிரதேச சபை நிர்வாகத்துடன் கதைத்த போது அவர்கள் பார்வையிட்டு செல்கின்றார்கள். ஆனால் அதனை நிவர்த்தி செய்து தரவில்லை. எனது கடைகளுக்குரிய மின்சார இணைப்புகளை தற்காலிகமாகவே தந்திருக்கின்றார்கள். அதற்குரிய வயர்கள் அனைத்தும் வெளியே கிடக்கின்றன. அதன் உரிய முறையில் நிவர்த்தி செய்து தரவில்லை என அந்த பொதுச் சந்தையில் சில்லறைக் கடை வியாபாரத்தில் ஈடுபடும் அருள் என்பவர் தெரிவிக்கின்றார்.
இது இவ்வாறு இருக்க களுவாஞ்சிகுடி பொதுச் சதைத் தொகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு கட்டடத்தின் மேல்மாடியில் அமைந்துள்ள கடைத் தொகுதிகள் அனைத்தும் அழுக்கடைந்துபோய் பாழடைந்து, புற்கள் முளைத்தும் புறாக்கள் வாழும் கூடாரமாக மாறியுள்ளதனால் அப்பகுதியில் பொரும் சுகாதாரப் பிரச்சனைகளையும், வர்த்கர்களும், பொதுமக்களும் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
அதுபோல் சந்தைத் தொகுதியை சுழ்ந்து காணப்படும் வடிகான்கள் அழுக்கடைந்து காணப்படுவதாகவும், மழை காலங்களில் பொதுச்சந்தை வளாகம் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்வதோடு, சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியிலிருந்தே தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வியாபாரிகள் அங்கலாய்க்கின்றனர்.
பிரச்சினைகள்
இந்தநிலையில் எமது கடைக்குள்ளேயே மழை நீர் உட்பபுகுந்து கொண்டு வருவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. இதற்காக கட்டடத்தை அமைத்து தந்தவர்கள் உரியமுறையில் நீர் வழிந்து ஓடுவதற்குரிய வசதிகளைச் செய்து தரவேண்டும். இதனால் மழைக்காலத்தில் எமது பொதுச் சந்தைக்கு மக்கள் வருவது மிக மிக குறைவாகும்.
கடந்த தைப்பொங்கல் காலத்தில் நாம் பெரிய பாதிப்பினை எதிர்கொண்டிருந்தோம். தற்போதும் இதுவரையில் எமக்குரிய முறையான மின்சார இணைப்புகளை அவர்கள் ஏற்படுத்தி தரவில்லை என அப்பொதுச் சந்தைத் தொகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் மற்றுமொரு வர்த்தகர் தெரிவிக்கின்றார்.
குறித்த சந்தைத் தொகுதியின் பழைய கட்டடத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள கடைத் தொகுதியை குத்தகைக்குப் பெறுவதக்கு யாரும் முன்வராத நிலமை காணப்படுவதாகவும், பிரதேச சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியனின் நிதி உதவியில் பொது நிர்வாக உள்நாட்டலுவர்கள் மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உள்ளூர் மேம்பாட்டு ஆதரவுத் திட்டம், எனும் செயற்றிட்டத்தின் கீழ் கிழக்கு மகாண சபையின் கண்காணிப்பின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால், களுவாஞ்சிகுடி பொதுச் சந்தை தொகுதிக்குரிய புதிய கடைத் தொகுதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைத்து வழங்கப்பட்டமையானது தமது வியாபாரத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. எனினும் கட்டடத்தில் இன்னும் பல பூர்த்தி செய்யாக குறைபாடுகள் காணப்படுகின்றன. அதனை பூர்த்தி செய்து தருமாறு தாம் பல கோரிக்கைகளை முன்வைத்தும் அவை இதுவரையில் பூர்த்தி செய்து தரப்படவில்லை என அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை தொகுதியில் 26,358,525, ரூபாய் பெறுமதியில் 21 கடைப்பகுதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அதில் சில சில பிரச்சினைகள் தற்போது இருக்கத்தான் செய்கின்றன. அது தொடர்பில் எமக்குச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள் ஆனால் விரைவில் நிவர்த்தி செய்வதற்குரிய ஏற்பாடுகளை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
கோரிக்கை
இவற்றினை விட களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் அமைந்திருக்கின்ற பழைய கட்டிட தொகுதியின் மேல் மாடியிலே அமைந்துள்ள கடைகள் அழுக்கடைதிருக்கின்றன. அவற்றைத் திருத்துவதற்காக வேண்டி இவ்வருடத்தின் பாதத்திலே நிதி ஒதுக்கீடுகளை நாங்கள் பரிந்துரை செய்திருக்கின்றோம் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் கடமையாற்றி வந்த நிலையில் தற்போது இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள முன்னாள் செயலாளர் ச.அறிவழகன் தெரிவித்தார்.
எனினும் அண்மையில் தான் நான் இப்பிரதேச சபைக்கு செயலாளராகப் பதவியைப் பொறுப்பேற்றுள்ளேன். உண்மையிலேயே களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் இவ்வாறு பல பிரச்சனைகள் இருப்பது தொடர்பில் ஆராய்கின்றேன். மிகவிரைவில் அங்கு காணப்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்கின்றேன் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு தற்போது புதிய செயலாளர் பொறுப் பொறுப்பேற்றுள்ள சு.சுகராஜன் தெரிவித்தார்.
தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த களுவாஞ்;சிகுடி பொதுச் சந்தைக்கு நிலையான முறையான வாகன தரிப்பிடம் இல்லையெனவும், மர நிழல்களிலும், வீதியோரங்களிலு தமது வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்லவேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
உணவகங்களையும், ஏனைய உணவுப் பொருட்கள் அவ்வப்போது பரிசோதனை செய்யும் பொதுச் சுகாதார பரிசோதகங்கள் பொதுஇடங்கள் மீதும் தங்களது பார்வையைச் செலுத்த வேண்டும்.
வருடாந்தம் பல இலட்சம் ரூபாவிற்கு அந்த பொதுச் சந்தைத் தொகுதியை குத்தகைக்குவிட்டு பணம் வசூலிக்கும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை வருமானத்தில் மாத்திரம் கரிசனை செலுத்தாமல் தமது பிரதே சபைக்கு பெருவாரியான வருமானத்தை ஈட்டித்தரும் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் காணப்படும் அடிப்படை பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதில் கரிசனை காட்டவேண்டியது கட்டாயமல்லவா.
குட்டி அரசாங்கமாக தேர்வு காலத்திற்கு காலம் தெரிவாகும் பிரதேச சபை உறுப்பினர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. பிரதேச சபைமுதல் ஜனாதிபதி வரைக்கும் மக்களால் தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளும் பட்டிருப்புத் தொகுதியின் வர்த்தக கேந்திர நிலையமாக விளங்கும் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்தி செய்து ஆரோக்கியமாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு அலையெனத் திரளும் மக்கள் மத்தியில் ஈடு செய்து கொடுக்க வேண்டும் என்பதே அந்தப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |