சிறைச்சாலையில் முன்னணி ஊடகவியலாளர் மீது கடுமையான தாக்குதல்! தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
இலங்கையின் முன்னணி தனியார் வானொலிச் சேவையொன்றின் ஊடகவியலாளர் ஒருவருக்கு சிறைச்சாலைக்குள் வைத்து கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
இலங்கையின் முன்னணி தனியார் வானொலி அலைவரிசையொன்றில் ஒளிபரப்பாகும் பிரபலமான புலனாய்வு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஊடகவியலாளர் ஒருவர், போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு எதிரான வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ள சமீபத்தில் டுபாயிலிருந்து திரும்பியபோது கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், திடீரென களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் அவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ள்ப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
களுத்துறை சிறைக்கு அவர் கொண்டுவரப்பட்ட பின்னர், அங்கு அவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த மற்றொரு கைதி, கூர்மையான ஆயுதத்தால் ஊடகவியலாளரது காதையும் வாயையும் வெட்டி துண்டித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் களுத்துறை சிறைச்சாலைக் கைதிகள் குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த நிலையில், குறித்த ஊடகவியலாளர் நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 30 August, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.