யாழில் அரச உத்தியோகஸ்தர் வீடொன்றின் மீது தாக்குதல் - தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது
யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கெமராக்களை சேதமாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசியல் அழுத்தம்
நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் , நடாத்தி , வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் தலைமையிலான கும்பல் சேதப்படுத்தி உள்ளது.
இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.
பொலிஸார் பொலிஸ் பிணையில் விடுவிக்க அரசியல் அழுத்தங்களும், பொலிஸ் உயர் அதிகாரிகளின் அழுத்தங்களும் தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 01/09/2026 அன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வீடு புகுந்து அச்சுறுத்தி பொருட்களுக்கு சேதம் விழைவித்த ஒருவருக்கு பொலிஸாரால் பிணை வழங்க முடியாது என்றும் பொலிஸ் பிணை வழங்கியது அரசியல் அழுத்தம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.