களுத்துறை மாணவி உயிரிழப்பு விவகாரம்! ஒருவருக்கு பிணை: மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்
களுத்துறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்கள் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு விடுதி உரிமையாளரின் மனைவிக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை இன்று (15.05.2023) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை பிரதான நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
முதலாம் இணைப்பு
களுத்துறையில்16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்பின் மத்தியில் களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மற்றும் யுவதி, விடுதி உரிமையாளரின் மனைவி மேலும் பிரதான சந்தேக நபரின் சாரதி ஆகிய நால்வரே இன்று (15.05.2023) நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்த சிறுமியின் தாய் உட்பட 100 பேர் நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமைதிப் போராட்டம்
''மரணித்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்'', ''பொலிஸ் முறையாக விசாரணை நடத்த வேண்டும்'', ''தரமற்ற கட்டடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்ற பதாகைகளை ஏந்தியவாறு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவுக் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.