கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்
கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக பொதுமக்கள் 3ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக 3ஆவது நாளான இன்றும் போராட்டத்தை அம்மக்கள் முன்னெடுத்திருந்தனர்.
பல வாதங்கள்
மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதனால் பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளையும் கண்டித்து இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
போலி வாக்குறுதிகள்
அத்துடன் குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர், குருகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |