நீர்நிலைகளில் மனித கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக விசனம்
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் எவ்வித முறையான வழிமுறைகளுமின்றி மனித கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதன் மூலம் பொதுமக்கள் சுகாதார ரீதியாக வெகுவாக பாதிக்கப்படுவதாகவும், அந்த கழிவுகளை மீன்கள் உண்பதனால் மீன் சாப்பிட முடியாத நிலை தோன்றியுள்ளது எனவும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான கந்தசாமி சிவலிங்கம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
கல்முனை மாநகர சபை முதல்வரை இது தொடர்பாக பேச பல தடவைகள் முயற்சித்தும் பயனளிக்கவில்லை. எங்களை புறக்கணிக்கும் விதமாக அவரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
இது இனவாத, பிரதேசவாத ரீதியாக பார்க்கும் விடயமல்ல. இது மக்களின் பொதுவான பிரச்சினை. விவசாயிகள் எங்களுக்கு முன்வைத்த தகவலையடுத்ததே நாங்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.
நாடு போக்குவரத்து முடக்கத்தில் இருக்கும் இந்த காலத்தில் இவ்வாறு மனித மாண்புக்கு பொருத்தமில்லாது செய்யப்படும் செயலினால் கல்முனை மாநகரசபை, பொது நூலகம், பேருந்து தரிப்பு நிலையம், பொலிஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை என்பவற்றில் பணிபுரியும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றார்கள்.
இவர்கள் உட்பட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.



