வைரமுத்தியம் பன்னாட்டுக் கருத்தரங்கில் கல்லாறு சதீஷ்
கவிஞர் வைரமுத்துவின் படைப்புலகம் சார்ந்து ' வைர முத்தியம் 'என்கிற பெயரில் ஒரு முழு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இடம்பெற்றிருந்தது.
கவிஞர் வைரமுத்து இதுவரை 12 கவிதை நூல்கள், 10 நாவல்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுப்பு, ஒரு வரலாறு, ஒரு சுயசரிதை, 2 கேள்வி பதில்கள் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு நூல், 2 பயணக் கட்டுரைகள், ஒரு பாடல் தொகுதி,ஒரு சிறுகதைத் தொகுப்பு என்று 39 நூல்களை எழுதி இருக்கிறார்.
ஒரு தொகுப்பாசிரியராகக் கலைஞரின் சொற்பொழிவுகளைத் தொகுத்து உருவாக்கிய நூலையும் சேர்த்தால் 40 நூல்கள். அவரது படைப்புகளை ஆய்வு நோக்கில் அணுகும் விதத்தில் 'வைரமுத்தியம் 'என்கிற ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி உருவாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் ஆசிரியர்கள் 20 பேர் தங்களது கட்டுரையின் சுருக்க வடிவத்தைக் கருத்தரங்கில் வாசித்துப் பகிர்ந்து கொண்டனர்.
புலம்பெயர் வாழ் தமிழர்கள்
இந்தக் கருத்தரங்கு கவிதை,நாவல் , கட்டுரை, பாடல் என்கிற நான்கு பெருந்தலைப்புகளில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்த கல்லாறு சதீஷ் என்கிற முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா நாவல் அரங்கில் உரையாற்றினார்.
ஓர் இலங்கைத் தமிழராகவும் புலம்பெயர் வாழ் தமிழர்களின் பிரதிநிதியாகவும் கலந்து கொண்ட அவர், 'வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போரும் வையகத்தின் மூன்றாம் உலகப்போரும்' என்ற தலைப்பிலான தனது ஆய்வுக் கட்டுரை சார்ந்து உரையாற்றினார்.
நான் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .கம்பன் கம்பராமாயணத்தை அரங்கேற்றிய போது நான் பிறக்கவில்லை.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இங்கே வைரமுத்தியம் அரங்கேற்றும் இந்த அவையில் நான் இருக்கிறேன். இதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
நான் அவர் எழுதிய மூன்றாம் உலகப் போர் நாவல் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதி இருக்கிறேன்"என்றவர்,ஆய்வுரைக் கருத்தில் புகுந்து உரையாற்றினார்.
கவிஞர் எழுதி இருக்கும் இந்த மூன்றாம் உலகப்போர் நாவல் மனிதனுக்கும் இயற்கைக்குமான யுத்தத்தைப் பற்றிப் பேசுகிறது. இது கண்ணுக்குத் தெரியாத யுத்தம் ,எதிரி யார் என்றே தெரியாத யுத்தம்,ஆயுதம் இன்றி நடத்தும் யுத்தம்" என்று தொடங்கியவர், நாவல் உலகமயமாக்கல் ஏற்படுத்தும் தாக்கம், உலக நாடுகள் முதல் உள்ளூர் விவசாயம் வரை அழித்து வருவதையும் புவி வெப்பமயமாதலுக்கு இட்டுச் செல்வதையும் பற்றிப் பேசுவதைத் தொட்டுக் காட்டினார்.
நோபல் பரிசு
நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸே போன்ற படைப்பாளிகளை நான் சந்தித்ததில்லை ஆனால் இங்கே அந்தப் பெருமைக்குரிய கவிப்பேரரசு அவர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என மகிழ்ந்தவர்,நாவல் மெக்ஸிகோ, ஜப்பான், தேனி மாவட்டத்து அட்டணம்பட்டி கிராமம் போன்றவற்றில் தாவித்தாவி சிறகடிப்பதைக் காட்சிக் காட்சியாக விவரித்துக் கூறினார்.
நாவலில் குறிப்பிடப்படும் விலங்குகள், பறவைகள், மரங்கள் பற்றிப் பட்டியலிட்டுப் பார்வையாளர்களை வியப்பூட்டினார்.அது மட்டுமல்ல, தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துகளுடன் தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
நாவலில் குறிப்பிடப்படும் உடம்பை விட்டு உசுரு போவது மட்டும் சாவல்ல, ஊரை விட்டு மனிதர் போவதும் சாவுதான் என்பதை நான் புலம் பெயர்ந்து சென்ற போது அனுபவித்தேன் என்று அவர் தனது புலம்பெயர் அனுபவங்களை நினைவு கூர்ந்த போது அரங்கு நெகிழ்ந்து கைதட்டியது.
கவிஞர் குறிப்பிடும் கண்ணுக்குத் தெரியாத மூன்றாம் உலகப் போர் நடக்கலாம். ஆனால் வையகத்தில் மூன்றாம் உலகப் போர் சாத்தியம் உண்டா என்ற கேள்வியைக் கேட்டு அதற்கு அவரே பதிலளித்தார்.
போர் என்பது தற்கொலைக்குச் சமமானது. இன்று தற்கொலை செய்து கொள்ளும் தைரியம் யாருக்கும் வருவதில்லை. எந்தப் போர் என்றாலும் முடிவு அழிவு என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
எனவே உலக நாடுகள் மூன்றாம் உலகப் போர் நடத்துவதை அனுமதிக்காது .அப்படிப்பட்டபொறுப்புணர்வும் ஈர மனமும் கொண்ட தலைவர்கள் தான் உலகத் தலைவர்களாக இருக்கிறார்கள் .
உலக நாடுகள் வணிகம் மூலம் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே ஆயுதங்கள் கொண்டு நடத்தப்படும் மூன்றாம் உலகப்போர் வராது "என்று கருத்துரைத்தார்.
விழாவில் நிறைவுரையில் கவிஞர் வைரமுத்து பேசும்போது,
" என் அடுத்த கட்ட பயணத்துக்கு ஆயத்தப்படுத்தும் இந்த விழா ஒரு பட்டாபிஷேகம் அல்ல. முத்தமிழ் எனக்கு முடிசூட்டும் விழா அல்ல. நீண்ட தூரம் ஓடி வந்தவனுக்கு ஒரு கோப்பை நெல்லிச்சாறு. அவ்வளவுதான்.
என் ஐம்பதாண்டு இலக்கியங்களுக்கு நான் பெற்ற பண்டித சம்மதம் இது. பண்டித சம்மதம் என்ற பதத்தை நான் பார்த்துப் பார்த்துப் பயன்படுத்துகிறேன். இறக்கும் வரை பண்டித சம்மதம் பாரதிக்கு கிடைக்கவில்லை.
பாரதிதாசனுக்கும் செய்யுட் செப்பம்
பாவேந்தர் பாரதிதாசனுக்கும் செய்யுட் செப்பம் இருந்ததே தவிர கவிதை அமைதி இல்லை என்று ஒரு கூட்டம் கூவிக் கொண்டே இருந்தது. பெரும் படைப்பாளிகளுக்கும் அறிவுக் கூட்டத்தின் அங்கீகாரம் எளிதில் கிட்டிவிடவில்லை.
காரணம் அவர்கள் கவிதை எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் உயிரோடு இல்லை. ஒரு கவிதை எழுதப்பட்ட பிறகு அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அதற்குள் ஆன்ம விசாரம் இருக்கிறதா? உண்மையின் உயிர்த்துடிப்பு கேட்கிறதா? அமரத் தன்மையின் கூறு நிலவுகிறதா ?என்பதை அறிய கவிதைக்கும் கவிஞருக்கும் குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டு தேவைப்படுகிறது.
அத்தனையும் இருந்தாலும் பண்டிதக்கூட்டம் ஒற்றைக்கை தூக்கியே ஆசிர்வதிக்கும். அதுவும் இடக்கை தூக்கியே ஆசீர்வதிக்கும். நான் பண்டித சம்பந்தம் பெற்றவரா? தாவிக் குதித்து மக்கள் மன்றத்தை அடைந்தவரா ? என்பதை வைரமுத்தியம் என்ற இந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் என்னை உரித்துக் கிழித்து மேய்ந்து இருக்கிறது.
ஒரு படைப்பு என்பது சதைக்கூட்டில் கருவாகி, பிறப்புறுப்பின் வழியே பெயர்ந்து விழுவது அல்ல. ஒரு விதை, ஒரு அணு, ஒரு சூரியன், ஒரு துரும்பு, ஒரு நிலா, ஒரு நட்சத்திரம், ஒரு எறும்பு அல்லது ஒரு பேரண்டம் என்று எதில் வேண்டுமானாலும் கருவாகி உருவாகும் ஒரு கலைப் படைப்பு.
அதற்குப் பல பருவங்கள் உண்டு. நெல்மணி உருவாகவே அதற்குப் பல பருவங்கள் உண்டு. நெல்மணிகளுக்கும் சொல் மணிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு தோழர்களே! நாற்றாக முளைப்பதிலிருந்து நிறைந்த கதிராக ஒரு நெல்மணி விளைவதற்கு நான்கு பருவங்கள் வேண்டும். ஒரு பனிக்காலம்,ஒரு கார்காலம், ஒரு குளிர்காலம்,ஒரு வெயில் காலம் என்று ஒரு நெல்மணிக்குள் நான்கு பருவங்கள் முண்டியடித்து படுத்துக்கிடக்கின்றன.
ஒரு நெல் மணிக்கே நான்கு பருவங்கள் என்றால், சொல்மணிக்கு ? எத்தனை பருவங்கள் என்று சொல்லத் தேவையில்லை. ஒரு நெல்மணி விளைவது தன்னைப் பெற்றுக்கொடுத்த நாற்று உண்பதற்கு அல்ல. மனிதர்களும் பறவைகளும் உண்பதற்கு. ஒரு படைப்பாளியின் படைப்பும் அவன் களிப்பதற்கல்ல.
படைக்கப்பட்ட உலகத்தின் களிப்புக்கும், விழிப்புக்கும், செழிப்புக்கும், பிழைப்புக்கும் தான். நெற்பயிரைப் போல அழுகல் நோய் வந்து அழுகிப் போகாமலும், வாடல் நோய் வந்து வாடி விடாமலும்.
கதிராடும் போது பூச்சி அரிக்காமலும், கத்தும் பறவைகள் முற்றும் கொத்திச் சென்று விடாமலும் இந்த நெல்மணிகள் நான் விளைவித்திருக்கும் இந்த நெல்மணிகள், சொல் மணிகள்.
என் சொல் மணிகள் என் மண்ணையும் மக்களையும் சென்று சேர்ந்து இருக்கின்றனவா? என் மொழியின் பசிதீர பயன்பட்டிருக்கின்றன என்பதைத்தான் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நேர்மையோடு திருத்திச் சொல்லியிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.
முதிர்ச்சியின்மையின் அடையாளம்
என் படைப்புகள் எல்லாம் சிறந்தவை என்று நான் இதுவரை நம்பியதுமில்லை. சொன்னதுமில்லை.
சராசரிப் படைப்புகளும் எழுதியிருக்கிறேன். அது என் முதிர்ச்சியின்மையின் அடையாளமாகும். ஆனால் கள்ளிக்காட்டு இதிகாசத்துக்குப் பிறகு நான் சராசரிப் படைப்பு எதையும் எழுதவில்லை என்று நீங்கள் கும்பிடுகிற கோயிலில் சத்தியம் செய்கிறேன்.
தமிழனாய் பிறந்தது என் மீது எனக்கு எவ்வளவு பெருமை சேர்த்து இருக்கிறதோ? என் படைப்பு தமிழில் பிறந்தது,அத்துணை சிறுமை சேர்த்திருக்கிறது என்று ஒரு சமூகம் கருதுகிறது.
என் படைப்புகளில் அரசியல் உண்டு. ஆனால் நான் அரசியலில் இல்லை. அரசியல் என்பது ஈடுபடக் கூடாத ஒன்று என்று ஒருநாளும் நான் எண்ணியதில்லை. ஆனால் என் படைப்புச் சுதந்திரத்தை எந்த அரசியலும் அனுமதிக்காது என்பதை மட்டும் அறிவார்ந்த முறையில் அறிந்திருக்கிறேன்.
எல்லாக் கட்சிகளும் தான் விரும்பியதை எழுத வைக்கும். ஆனால் நான் விரும்பியதை எழுத வைக்கும் கட்சி உண்டா என்று எண்ணிப் பார்க்கிறேன்.
அதனால் என் சிந்தனை, சுவரில் முட்டிய பந்தைப்போல் திரும்பி வந்துவிடவே வாய்ப்பிருக்கிறது. இதை இந்தக் கருத்தரங்கின் ஆசான்கள் எனக்கு அறிவுப்படுத்தி இருக்கிறார்கள். என்னைத் திருத்திக் கொள்ளவும், நல்ல வழியில் என்னை நிறுத்திக் கொள்ளவும் இந்த அறிவுக்கூட்டத்தின் ஒளிவிளக்குகள் எனக்கு வழிகாட்டும் என்று நம்புகிறேன்.
தாய்மொழி சிதைந்து போன மாநிலங்களின் தனிப்பெரும் படைப்பாளிகள் என்று பெயர் சொல்லத் தக்கவர்கள் அருகி வருகிறார்கள் ,அல்லது அற்றே போகிறார்கள்.
ஆனால் செம்மொழியாம் தமிழ் மொழியில் வீறு கொண்ட படைப்பாளிகள் களிறு போல் நிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதை இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இந்தியாவின் எல்லா தேசிய இனங்களுக்கும் எடுத்துச்எடுத்துச் செல்லும்.
இந்தியாவிற்கு வெளியிலும் எழுதிச் சொல்லும். இரை உண்ட முதலை கரையேறி வரும். கரையேறிய முதலை தன் உடலைத் தண்ணீருக்குள் ஆழ்த்திவிட்டு திறந்த வாயை கரையில் வைத்து இளைப்பாறும் .
அதன் பற்களின் இடுக்குகளில் சிக்கி இருக்கும் உணவுத் துண்டுகளைப் பறவைகள் கொத்திக் கொத்திப் பசியாறிக் கொள்ளும்.பற்களைச் சுத்திகரித்துக் கொண்ட முதலை மீண்டும் ஆழநீரில் சென்று அமிழ்ந்து விடும்.
முதலைகளின் பற்களைச் சுத்தப்படுத்தும் பறவைகளைப் போல என் சொற்களைச் சுத்தப்படுத்தி உள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அவர்கள் அனைவருக்கும் நன்றி. என் உயிர், உடல் , சமூகம் என்ற முக்கூட்டு வாழ்வில் கவனமாகத் தேடி வருகிறேன். மனிதர்கள் வாழாத வாழ்க்கையையும் கேளாத கானங்களையும் மீட்டுக் கொடுக்கும் கலை இலக்கியத்தைச் செழுமைப் படுத்துவதே பிறந்த பயன் என்று பெரும்பயணம் சென்று கொண்டிருக்கிறேன்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

நான் இன்னும் அந்த இழப்பில் இருந்து வெளியே வரவில்லை, இன்னும் கொஞ்சம்.. பிக்பாஸ் புகழ் ஷிவானி எமோஷ்னல் Cineulagam

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் News Lankasri
