கடவத்தை-மிரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
கடவத்தை-மிரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்படுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வு கடவத்தை இடைமாற்ற வளாகத்தில் இன்று (17) இடம்பெற்றது.
கட்டுமானப் பணிகள்
2016 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கிய இந்த அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் இப்போது திறக்கப்பட்டிருந்தாலும், முதல் கட்டம் பல்வேறு காரணங்களால் தாமதங்களை எதிர்கொண்டுள்ளது.
168.7 கிலோமீட்டர் நீளமுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானம் 2016 இல் சீன எக்ஸிம் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட 989 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டம் நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் கட்டம் கடவத்தையிலிருந்து மீரிகம வரை 37 கிலோமீட்டர் தூரம் வரையும், இரண்டாவது கட்டத்தில் மீரிகமவிலிருந்து குருநாகல் வரை 39.7 கிலோமீட்டர்களும், மீரிகமவிலிருந்து அம்பேபுஸ்ஸ வரை 9.1 கிலோமீட்டர்களும் அடங்கும்.
மூன்றாம் கட்டம் பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரை 32.5 கிலோமீட்டர் நீளமும், நான்காவது கட்டம் குருநாகல் முதல் தம்புள்ளை வரை 60.3 கிலோமீட்டர் நீளமும் கொண்டது.
கட்டுமானப் பணிகள் தொடங்கியதைத் தொடர்ந்து, மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான இரண்டாம் கட்டம் ஜனவரி 15, 2022 அன்று பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.
தொழிலாளர்கள் பற்றாக்குறை
இருப்பினும், அடுத்தடுத்த அரசியல் ஸ்திரமின்மை, பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான முதல் கட்டத்தின் கட்டுமானப் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.
இது முதன்மையாக சீன எக்ஸிம் வங்கியின் நிதி இடைநிறுத்தப்பட்டதால் ஏற்பட்டது.

கடவத்தை-மிரிகம பிரிவில் சுமார் 20% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டுமானத்தை மீண்டும் தொடங்க சீன எக்ஸிம் வங்கி இப்போது யுவானில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான புதிய கடனை அங்கீகரித்துள்ளது.
கடவத்தை–மிரிகம பிரிவு 2028 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |