கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ஆரம்பம் (PHOTOS)
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையிலிருந்து கச்சதீவு செல்வதற்காக பொதுமக்கள் குறிக்கட்டுவானில் இருந்து புறப்பட்டனர்.
இன்று மதியம் ஒரு மணியளவில் குறிகட்டுவானிலில் தரித்து நின்ற வடதாரகை மூலம் கச்சதீவு செல்வதற்கான படகு பயணத்தை இலங்கை கடற்படை ஒழுங்கு செய்தது. மதகுருமார்,பக்தர்கள், சுகாதார பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக சிநேகபூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக வடபகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர் சங்க பிரதிநிகளும் கச்சதீவுக்கு பயணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[
முதலாம் இணைப்பு
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளன.
திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் அந்தோணியார் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்பட்டு தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலியும், இரவில் அந்தோணியார் தேர் பவனியும் நடக்கவிருக்கின்றது.
இந்நிலையில், இன்று காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 80 பக்தர்கள் மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகில் கச்சத்தீவு புறப்படுகின்றனர். அதற்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கச்சத்தீவு செல்லும் இந்திய பக்தர்களை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் வைத்து சுங்கத்துறை,காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முழுமையாக சோதனை செய்த பின் படகுகளில் செல்ல அனுமதிக்கின்றனர்.
மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் பக்தர்கள் இரண்டு தவனை கோவிட் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், கோவிட் பரவல் தடுப்பு விதிமுறைகளை பின் பற்றி கச்சத்தீவு ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இன்று யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள நெடுந்தீவில் பங்குதந்தை வசந்தம் தலைமையில் இலங்கை பக்தர்கள் 50 பேர் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.
இன்று மாலை 5 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமான பின்னர் தேர் பவனி, பிரார்த்தனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து, நாளை காலை இலங்கை இந்திய பங்கு தந்தைகளின் கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது.
இதற்கான முழு ஏற்பாடுகளையும் யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள செல்லும் இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களை ஒன்றினைத்து கடற்தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக திருவிழாவில் கலந்து கொள்ள செல்லும் இந்திய கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி பாதுகாப்பு நலன் கருதி இன்றும், நாளையும் நாட்டு படகு மற்றும் விசைப்படகு கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது என ராமேஸ்வரம் மீன் வளத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 300க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.







