கச்சத்தீவு பிரச்சினை வாக்குப்பதிவு நாளில் பிரச்சினையை ஏற்படுத்துமா..!
கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் எழுப்பப்படுவதன் மூலம், வாக்குப்பதிவு நாளில் இந்த பிரச்சினை வாக்காளர்களை எப்படி பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் வலியுறுத்தியுள்ளது.
என்றாலும், மத்திய, மாநில அரசாங்கங்களின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு, தீவுக்கு தொடர்பில்லாத உண்மையான பிரச்சினைகள் உள்ளன என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
அத்துடன் சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்வது மட்டுமன்றி, இலங்கைத் தமிழ் கடற்றொழிலாளர்கள் போருக்குப் பின்னரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தங்கள் வாழ்வை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர்.
இதன்போது இந்திய கடற்றொழிலாளர்கள், இங்கையில் தடைசெய்யப்பட்ட அடிமட்ட இழுவைப் படகுகள் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்திய அரசு ஆதரிக்கும் ஆழ்கடல் மீன்பிடிக்கு மாறுவதே தீர்வாக இருக்கும்.
ஆனால் குறைந்த மானியம் வழங்கப்படுவதால் பயனில்லை என்று இந்திய கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள்
எனவே கடற்றொழில் சமூகத்தை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை காட்டிலும், அரசியல் கட்சிகளின் பிரசாரம், நாட்டின் சர்வதேச நிலைக்கு தீங்கு விளைவிக்கும் என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கூறுவதாகவும் செய்தித்தாள் தெரிவிக்கிறது.
எனவே, தேவையற்ற வாய்ச்சவடால்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இலங்கை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழில் சமூகத்தின் கருத்துக்களைக் கேட்டு, பிரச்சினைகளைத் தீர்க்க தொலைநோக்கு, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும் என்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |