போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உள்ளகப் பொறிமுறை மூலம் நீதி நிச்சயம்! பிரதமர் ஹரிணி
இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளகப் பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் சம உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் சூழல் உருவாக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
போர்க்குற்றங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உள்ளகப் பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது நாம் வழங்கிய உறுதிமொழிகளில் ஒன்றாகும். எனவே, அது தொடர்பில் எமக்குப் பாரிய பொறுப்பு இருக்கின்றது. இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது மிக முக்கியம். தமது உரிமைகளை அரசு பாதுகாக்கின்றது என அனைத்து இன மக்களும் உணரும் நிலை ஏற்பட வேண்டும்.
இதற்காக நீதித்துறையின் சுயாதீனம் குறித்து நம்பிக்கை ஏற்பட வேண்டும்.எந்தவொரு விசாரணைகளிலும் அரசியல் ரீதியில் அரசு கையடிப்பதில்லை. அதனால்தான் கடந்த காலங்களில் மறைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில்கூட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு என்ன செய்யலாம், நல்லிணக்க பக்கத்தில் எவ்வாறு தலையீடுகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றி நீதி அமைச்சு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.
இவற்றுடன் தொடர்புடைய அலுவலகங்களை வலுப்படுத்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாம் இனவாதத்தை தூண்டுவதில்லை. இனவாத அரசியலை நிராகரிக்கின்றோம்.
இனவாத நோக்கில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. அதனால்தான் அனைத்து இன மக்களும் இந்த அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.



