இலங்கையின் நீதி..! வடகிழக்கில் அநீதி..!
செங்கோல் அரசருக்குரிய என ஆட்சியாளரின் அடையாளம் செங்கோல் என்கிறது. செம்மை, கோல் என்ற இரு சொற்களே செங்கோல். செம்மை என்பது நோ்மை. நோ்மையான ஆட்சி என்பதைக் குறியீடாகக் காட்டவே மன்னா்கள் கைகளில் நேரிய கோலால் ஆன செங்கோல் தரப்பட்டிருக்கிறது.
நீதி பரிபாலனம் என்பதையும் செங்கோன்மை என்றே சொல்கிறோம். யாரிடத்தும் பாரபட்சம் பாராமல் செயலாற்றும் எமதா்ம ராஜனை ‘செங்கோற் கடவுள்’ என்கிறது தமிழ். ஆக, பாரபட்சம் பாராது அனைவருக்கும் சமநீதியை வழங்கும் ஆட்சியாளரின் கைகளில் இருப்பது செங்கோல்.
திருக்கு செங்கோன்மை என்று ஒரு தனி அதிகாரமே தந்து செங்கோலின் முக்கியத்துவத்தை உணா்த்துகிறது. ஆனால் இந்தநாட்டில் அது உள்ளதா என்பது கேள்விக்குறிதான்.
இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்றோரின் ஆக்கிரமிப்பு நிலங்களை அபகரித்து தமது இனக் குழுமங்களை இலங்கையில் குடியேற்றும் திட்டமானதாக இருக்கவில்லை. அவர்களது நோக்கம் வேறானது. ஆனால் அதற்கு முற்பட்ட காலங்களில் தமிழர் நிலங்களை அபகரிப்புச் செய்யும் பலத் திட்டங்கள் சிங்கள பெரும்பான்மை இனத்தால் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்தே உள்ளன.
தமிழர் வாழ்ந்து, ஆட்சி செய்த பல நிலங்கள் இன்று சிங்களப் பகுதிகளாக பிரதேசங்களாக தோற்றம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டு கதிர்காமம், தம்பலகாமம் போன்றன ஒரு காலகட்டங்களில் தமிழரால் ஆட்சி செய்தப் பகுதிகளாகும்.
போராட்ட வடிவங்கள்
எல்லாளன் துட்டகைமுனு போர் நடந்த அநுராதபுரமும் ஒரு காலத்தில் தமிழ் அரசன் எல்லாளனின் ஆட்சிப் பகுதியாகவே இருந்தது என்பதே உண்மை. பிரித்தானியரின் வெளியேற்றத்தின் பின்னும் இந்த சிங்கள இனத்தின் நிலக் கவர்வுத் திட்டம் பல்வேறு சூழ்ச்சிகளாலும், தந்திர வழிகளாலும், திட்டமிட்டக் குடியேற்றங்களாலும் தமிழர் நிலம் சிங்களவர் நிலமாக்கப்பட்டது.
இதனால் தமிழ் இன மக்கள் தொகை குறைந்தும் சிங்களவர் மக்கள் தொகையும் பெருகும் நிலை ஏற்படுத்தப்பட்டது. படிப்படியாக பல பூர்வீகத் தமிழரின் நிலங்கள் சிங்களவர் நிலங்களாக மாறத்தொடங்கியது. பல ஊர்களின் தமிழ் பெயர்கள் சிங்களப் பெயர்களாகின.
இத்திட்டங்கள் 1980களில் படித்த மாணவர்களை கிளர்ந்தெழ வைத்தது. அது ஆயுத போராட்ட வடிவங்களாக மாறியது. அது வளர்ந்து வெவ்வேறு சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளிற்குமான பெரும் போராகியது.
இந்தப் போராட்டத்தைப் பற்றி உலகில் பலத்தரப்பட்டோரிடமும் பலத்தரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் இது இலங்கை அரசின் சிங்கள இனப் பரம்பலை ஏற்படுத்துவதற்கான தமிழர் நில அபகரிப்பு (வலிந்து கவர்தல்) போராகும்.
பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்கள் தமது பூர்வீக தாயகத்தை மீட்க வெவ்வேறு வழிகளிலும் முயன்றும் பங்களித்தும் வருகின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வெவ்வேறு அழுத்தங்களுக்கும் மத்தியிலும் தமது தாயக மீட்புக்கான ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழினத்துக்கான உரிமை
ஈழவிடுதலைப்போராட்டம் அகிம்சையில் தொடங்கி ஆயுதத்தில் மௌனிக்கும் வரை கடந்த 2009, மே,18, வரை எமக்கு பல சவால்கள், உயிரிழப்புகள் எல்லாம் இடம்பெற்ற போதும் வடகிழக்கு தாயகத்தில் நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், படையினர் முகாம்கள், தொல்பொருள் ஆய்வுத்தொல்லை, பன்சாலைகள், புத்தர் சிலைகள் நிறுவுதல் என்ற எந்த தொல்லைகளும் பரந்த அளவில் இடம்பெறவில்லை.
ஏன் காட்டு யானைகளின் தொல்லை கூட இருக்கவில்லை. முள்ளிவாய்க்கால் போர் மௌனம் ஏற்பட்டு இப்போது இராஜதந்திர ரீதியிலான தமிழ்தேசிய அரசியல் பன்னாடுகளில் செயல்படும் கடந்த 15, வருடங்களாக வடக்கு கிழக்கு எங்கும் பல்வேறுபட்ட நில ஆக்கிரமிப்புகளும், அத்துமீறல்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருதை காணலாம்.
இவ்வாறான நடவடிக்கைகளை தமிழ்த்தேசிய கட்சிகளாலும், பல பொது அமைப்புகளாலும் கடந்த 15, வருடங்களாக அதனை நிறுத்துவதற்கான போராட்டங்களையும், சட்ட நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவது கண்கூடு.
ஆனால் எவ்வாறான போராட்டங்கள், சட்ட நடவடிக்கைகள், நீதிமன்றத்தீர்ப்புகள் என இலங்கையில் வலியுறுத்தினாலும் அவைகளை இனவாதம் மூலமாக தடுத்து சட்டத்தை மீறும் செயல்களில் படையினரும், பெரும்பான்மை அரசியல்வாதிகளும், பௌத்த துறவிகளும் இணைந்து தமிழர்களின் நிலங்களில் அத்துமீறல்களை செய்த வண்ணம் உள்ளனர்.
யார் ஆட்சியமைத்தாலும் யார் ஜனாதிபதிகளாக வந்தாலும் வெளியில் ஒரேநாடு. ஒரேசட்டம், ஒரே நாட்டு மக்கள் என உதட்டால் உச்சரித்தாலும் உள்ளத்தால் தமிழினத்துக்கு இந்த நாட்டில் உரிமை இல்லை என்ற மனப்பாங்குடனேயே ஆட்சியாளர்களின் எல்லாச் செயல்பாடுகளும் அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.
முள்ளிவாய்க்கால் போர் மௌனத்திற்கு பின்னரான கடந்த 15, வருடங்கள் நெருங்கும் நிலையில் ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ்தேசிய கூட்டமைப்பு, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி, ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட சில நீதிமன்ற வழக்குகளை பட்டியல் இட்டால் சில உண்மைகள் அறியலாம்.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் சூழலில் நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் பூதவுடல் தகனம் செய்தது தொடர்பாக ஞானசார தேரர், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
நீதிமன்ற வழக்குகள்
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா சாணக்கியன் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 2023.09.22 அன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குருந்தூர் மலையில் தமிழ் மக்களின் பொங்கலை தடுத்து அடாவடித்தனங்கள் புரிந்த கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்து இருந்தார்.
குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த பொதுமக்களை மோசமாக இம்சித்த பொலிஸ் அதிகாரிகள் மீது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் முறைப்பாடு செய்து இருந்தார். தமிழர்களை வெட்டுவேன், கொல்லுவேன் என பேசிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது சமூக செயல்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்து இருந்தார்.
திருகோணமலை பொன்மலைக்குடா மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்த பிக்கு பாணமுரே திலகவன்ச தேரர் மீது சிவில் சமூக அமைப்புகள் பொலிஸில் முறைப்பாடு செய்து இருந்தனர்.
மயிலத்தமடு மாதவனை பகுதிக்கு சென்ற சர்வ சமய தலைவர்கள் 18 பேரை பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் 6 மணித்தியாலம் தடுத்து வைத்தது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் ஜனாதிபதி செயலாளர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு இருந்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து ஆளுநர் செந்தில் தொண்டமானை அச்சுறுத்திய பிக்குகள் மீது அரச அதிகாரிகளே முறைப்பாடு செய்து இருந்தனர்.
திருகோணமலையில் குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது என ஆலய நிர்வாகிகள் முறைப்பாடு செய்து இருந்தனர்.
வெடுக்குநாறி மலை
காங்கேசன்துறை சை ஆலய சூழலில் கெமுனு விகாரை என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் என சைவ அமைப்புகள் முறைப்பாடு செய்து இருந்தனர்.
மட்டக்களப்பில் குசலமலை சைவ குமரன் ஆலயத்தின் முன் கதவு , மூலஸ்தான விக்கிரம் என்பன அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன என சிவில் அமைப்புகள் முறைப்பாடு செய்து உள்ளனர்.
கீரிமலை சிவன் ஆலயம், சடையம்மா மடம், முருகன் ஆலயம் என்பன அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டு இருக்கின்றமை குறித்து ஆறு திருமுருகன் முறைப்பாடு செய்து உள்ளார் வவுனியா பூவரசங்குளம் மலையிலிருந்த பிள்ளையார் சிலை, சூலம் என்பன சேதப்படுத்தப்பட்டுள்ளன என ஆலய பரிபாலன சபையினர் முறைப்பாடு செய்து உள்ளனர்.
குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவிலின் சூலம் பிடுங்கி வீசப்பட்டு இருக்கின்றது என மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முறைப்பாடு செய்து இருந்தார் வெடுக்குநாறி மலை சிவலிங்கம் அடித்து நொறுக்கப்பட்டது என பூசகர் முறைப்பாடு ஏற்கனவே செய்துள்ளார்,
அதன்பின்னர் கடந்த மார்ச் 8, மகாசிவராத்திரி தினத்தில் அங்கு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை அடித்து துரத்தி தற்போது குருக்கள் உட்பட ஏழுபேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி வரை அவர்களை தடுப்பு காவலில் வைக்க நீதுமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு
பூர்வீகத்தமிழர் நிலத்தில் புனித சிவராத்திரி விழாவைக்கூட நடத்தமுடியாமலும், தரிசிக்கமுடியாமலும் தமிழர் நிலை உள்ளது. தென்னவன் மரபடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை பொலிஸ் அதிகாரிகளே தடுத்தனர் என முறைப்பாடு உள்ளது.
தையிட்டியில் மக்களது காணிகளை சட்டவிரோதமாக சுவீகரித்து கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான ஆட்சிதான் வடகிழக்கு தமிழர்கள் மீது உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தும் சர்வதேசமும் இதனை அங்கீகரிக்கிறதா என்ற கேள்வி பலரிடம் உள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும் பின்னிப்பிணைந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே.
இந்தப்பிணைப்பு அரசினால் தொடர்ச்சியாகப் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இனரீதியான குடியேற்றத்திட்டங்கள் திட்டமிட்டு வடகிழக்கில் அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதை சர்வதேச சமூகம் புரிந்து கொண்டு அதற்கான தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Ariyam அவரால் எழுதப்பட்டு, 22 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.