1983 ஜூலைக் கலவரம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி பிரேரணை கையளிப்பு
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன வன்முறை, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்ட ஒரு கறைபடிந்த வரலாற்றுத் துயரமாகும்.
இந்த துயர சம்பவத்தின் உண்மைகளை வெளிக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையொன்று எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆளும் கட்சியின் 51 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் நேற்று(08.10.2026) சபாநாயகரிடம் பிரேரணையொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
பிரேரணை சபநாயகரிடம் கையளிப்பு
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால், பல உயிர்கள் பறிக்கப்பட்டன, வீடுகளும் சொத்துகளும் அழிக்கப்பட்டன, பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த மண்ணிலேயே பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன், பலர் நாட்டை விட்டு வெளியேறவும் நேரிட்டது.

இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நடவடிக்கை எதை நோக்கிச் செல்ல வேண்டும்? 1983 ஜூலைக் கலவரம் தொடர்பாக முழுமையான ஆய்வை மேற்கொண்டு, முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கக் கோரும் பிரேரணையொன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கைக்காக பிரேரணை
இந்த முயற்சி வெறும் அரசியல் நடவடிக்கையாக முடிந்துவிடக் கூடாது. இது உண்மையை வெளிக்கொணர்வதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களுக்குச் செவிசாய்ப்பதற்கும், வரலாற்று அநீதிகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் வழிவகுக்க வேண்டும்.
மக்கள் உரிமை நோக்கிலான முக்கியக் கோரிக்கைகள்,
01. 1983 ஜூலைக் கலவரம் தொடர்பான வரலாற்று உண்மைகள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் வெளிப்படையாக ஆராயப்பட வேண்டும்.
02. உயிரிழந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சொத்துகளை இழந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிப்புகள் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

03. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி வழங்குவதற்கான நடைமுறைச் சாத்தியமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட வேண்டும்.
04. இன வன்முறைகள் மீண்டும் நிகழாத வகையில் சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் அரசின் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
05. தெரிவுக்குழுவின் விசாரணைகள் வெளிப்படையாகவும், சுயாதீனமாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்புடனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
06. முன்வைக்கப்படும் பரிந்துரைகள் அறிக்கைகளுடன் முடங்கிவிடாமல், நடைமுறைப்படுத்தக்கூடிய செயல் திட்டங்களாக மாற்றப்பட வேண்டும்.
வரலாற்றை மறப்பது நல்லிணக்கம் அல்ல. உண்மையை எதிர்கொண்டு, அநீதிகளை அங்கீகரித்து, நீதியை நிலைநாட்டுவதுதான் உண்மையான நல்லிணக்கத்தின் அடித்தளம்.
கடந்த 1983 ஜூலைக் கலவரத்தைப் பற்றிய ஆய்வு என்பது கடந்த காலத்தை மட்டும் பேசுவதற்கான வாய்ப்பல்ல, எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் இனத்தின் பெயரால் ஒடுக்கப்படாத இலங்கையை உருவாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகின்றது.
மகிந்தவுக்கு பதிலாக கைது செய்யப்பட்ட ஷிரந்தி! கை விலங்கோடு மக்களிடம் காட்சிப்படுத்த தீர்மானம் - வலுக்கும் எதிர்ப்பு
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan