மட்டக்களப்பு விஜயத்தில் மன உளைச்சலை வெளியிட்ட ஜுலி சங் (Photos)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை பார்வையிட்ட அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தேவாலயத்திற்கு நேற்றைய தினம் (13.11.2023) விஜயம் மேற்கொண்டிருந்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரின் உத்தியோகப்பூர்வ X தளத்தில் தெரிவித்துள்ளதாவது,
நான் சீயோன் தேவாலயத்திற்குச் சென்று, 2019 இல் இடம்பெற்ற குண்டு தாக்குதல் குறித்து போதகர் ரோஷன் மகேசனுடன் கலந்துரையாடியதில் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டது.
இங்கு கொல்லப்பட்ட 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜுலி சங், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பன்முகத்தன்மைக்கு முக்கிய சான்று
மட்டக்களப்பு பிரதேசத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த பங்கு குறித்து பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.
சமூகங்களுக்கிடையில் இனவாத பதற்றங்களை தணிப்பதில் அவர்கள் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இலங்கையின் வெற்றி மற்றும் பன்முகத்தன்மைக்கு முக்கிய சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் அதில் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொண்டு முன்னேறுவதற்கும், காணப்படும் வாய்ப்புகளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ள இலங்கையர்களிடம் இருந்து இனங்கண்டு பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் ஒன்று சேர்ந்து ஈடுபட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை மற்றும் அமெரிக்காவின் 75 வருட கூட்டாண்மை இலங்கையர்களுக்கு எவ்வாறான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதை ஆராய்வதற்காக அமெரிக்கதூதுவர் ஜுலிசங் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |