மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து நாட்டைத் திறம்பட ஆளுவீர்கள்! ஜூலி சாங் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து நாட்டைத் திறம்பட ஆட்சி செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து, இம்மாதம் 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங், நேற்று (12.1.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது, தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஜூலி சாங் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டினார்.
இராஜதந்திர உறவு
மேலும், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் வழங்கிய பங்களிப்புக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவுக்கும் ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற ஜூலி சாங், அமெரிக்கா – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல முக்கிய மைல்கற்களில் தனது தலைமைத்துவத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.