வர்த்தமானி அவதானிப்பு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரும் நீதித்துறை
பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான அவதானிப்பு அறிக்கையை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அவதானிப்பு அறிக்கை, எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி உயர் நீதிமன்றில் சமர்பிக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரிமை மீறல் மனு
நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனத் தீர்மானிக்கக் கோரி, கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
பிரியந்த ஹேரத் என்பவரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் முடிவும் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் விதிகளை மீறி எடுக்கப்பட்டதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 10வது பிரிவின் பிரகாரம், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
ஐந்து வார கால அவகாசம்
நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசித் திகதியிலிருந்து ஐந்து வாரங்களுக்குக் குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகாமலும் தேர்தல் நடைபெறும் திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இதன்படி வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியாகவும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியாகவும் உள்ளன.
எனவே நவம்பர் 15ஆம் திகதி முதல் நவம்பர் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியே தேர்தலை நடாத்த வேண்டிய சரியான காலப்பகுதி என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |