ஷானி அபேசேகரவின் வழக்கில் இருந்து விலகிய நீதியரசர்
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இருந்து நீதியரசர் யசந்த கோதாகொட இன்று விலகிக்கொண்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்படுவதை தடை செய்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி ஷானி அபேசேகர இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதியரசர்கள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட, மகிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் அமர்வின் முன் ஆராயப்பட்டது.
இதன் போது ஷானி அபேசேகர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த விடயம் சம்பந்தமாக மற்றுமொரு அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுவை ஏப்ரல் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரினார்.
இதற்கு அனுமதியை வழங்கிய நீதிமன்றம் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.