செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இளவாலை பொலிஸார்
இளவாலை(Ilavalai) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்றையதினம்(3) 128 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.
கொழும்பு இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் கஞ்சா இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கஞ்சாவை பொதியிடும் நடவடிக்கைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
செய்தி சேகரிப்பு
இந்த செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக இரண்டு ஊடகவியலாளர்கள் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தாங்கள் ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்தினர்.
பின்னர் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரினர்.
நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு உடனடியாக பதில் கூறாமல் அசண்டயீனமாக செயற்பட்டு இழுத்தடிப்பு செய்துள்ளார்.
பின்னர் விசேட அதிரடிப்படையினர் சம்மதித்தால் செய்தி சேகரிப்பில் ஈடுபடுங்கள் என கூறினார்.
இதன்பின்னர் விசேட அதிரடிப்படையினரிடம் சென்ற ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்திவிட்டு செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரினர்.
அதற்கு விசேட அதிரடிப்படையினர், கஞ்சாவை பொதியிட்ட பின்னர் காணொளி எடுக்கலாம் என கூறினர். அதற்கு சம்மதம் தெரிவித்த ஊடகவியலாளர்கள் வெளியே காத்திருந்தனர்.
இதன்போது இளவாலை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து ஊடகவியலாளர்களை பார்த்து நீங்கள் யார்? ஏன் வந்தீர்கள் என வினவியுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள்
இதன்போது குறித்த ஊடகவியலாளர்கள் விடயத்தை கூறினர். உடனே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊடகவியலாளர்களை மிரட்டும் விதத்தில் செயற்பட்டார்.
ஊடகவியலாளர்களை கைப்பேசி பாவனை செய்ய வேண்டாம் என்றும், யாருடனும் அழைப்பு எடுத்து பேசக்கூடாது என்றும், கைப்பேசிகளை உள்ளே வைக்குமாறும் மிரட்டினார்.
அதற்கு குறித்த ஊடகவியலாளர்கள், தாங்கள் தனிப்பட்ட விடயத்துக்கு கைப்பேசியை பாவிப்பதாக கூறிய பின்னரும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் அவர்களை மிரட்டினார். ஊடகவியலாளர்களை செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க கூடாது என்பது போலவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் செயற்பாடுகள் காணப்பட்டது.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தரின் அநாகரிகமான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட பல்வேறு போதைவஸ்துகள் விற்பனை மற்றும் பாவனை இடம்பெற்று வருகிறது.
கைது நடவடிக்கைகள்
இவ்வாறான சூழ்நிலையில் பொலிஸார் உரிய கவனம் செலுத்தாமல் இருக்கும்போது இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினருமே பெரும்பாலான கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸாருக்கும் இவ்வாறான குற்றச்செயல்கள் புரிபவர்களுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுகின்றனவா என மக்கள் ஏற்கனவே பல தடவைகள் சந்தேகம் வெளியிட்டனர்.
இவ்வாறான பின்னணியில் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்திய செயற்பாடானது பொலிஸார் தங்களது பிழைகளை மூடிமறைக்க முற்படுகின்றனரா? கஞ்சாவை மீட்ட விசேட அதிரடிப்படையினரே செய்தி சேகரிப்புக்கு அனுமதி வழங்கிய நிலையில் அதனை தடுக்கும் செயற்பாட்டில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டது ஏன்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.
வேறு இடத்தில் இருந்து வருகின்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் இவ்வாறான கைதுகள் முன்னெடுக்கப்படும்போது, குறித்த பகுதியில் நிலையாக உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரிகளும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைதுகளை முன்னெடுக்காது உள்ளமை மக்கள் மத்தியில் பொலிஸார் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
