கொழும்பில் லிற்றோ காஸ் நிறுவன அதிகாரிகளை திணறடித்த ஊடகவியலாளர்கள்
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நேற்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியுள்ளார்கள்.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சார்பில் நேற்று கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் சார்பில் திட்ட பணிப்பாளர் கமலநாத விக்ரமசிங்க, முகாமையாளர் இந்திரசிறி விஜயரத்ன மற்றும் அதன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக பத்திரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு தொடர்பில் தமது நிறுவனம் கருத்து தெரிவிக்க முடியாது எனவும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இன்று சந்தையில் கிடைக்கும் எரிவாயு சிலிண்டர்களிலும் முந்தைய எரிவாயு கலவையே காணப்படுவதாகவும் லிட்ரோ டெர்மினல் நிறுவனத்தில் இருந்து தங்கள் நிறுவனத்திற்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் லிட்ரோ நிறுவன செயற்பாடுகளின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக எரிவாயு வெடிப்புகள் ஏற்பட எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களே காரணமா? என ஊடகவியலாளர்கள் லிட்ரோ கேஸ் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் அமைதியாகியுள்ளனர்.
எரிவாயுக்களின் கலவை 50 சதவீத ப்ரொப்பேன் மற்றும் 50 சதவீத பியூட்டேன் உள்ளமை இதற்குக் காரணம் அல்லவா என ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர்.
தற்போது சந்தையில் ப்ரொப்பேன் 30 - 40 சதவீதத்திலும், பியூட்டேன் 60 - 70 சதவீதத்திலுமே உள்ளதென லிட்ரோ நிறுவனத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.
