பேருந்துகளில் ஏற்றாமையால் வீதியில் தவித்த மாணவர்கள்! ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தலென முறைப்பாடு
பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற பேருந்துகள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரியான தீர்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் மற்றும் கிழவன்குளம் கிராமங்களை சேர்ந்த மாணவர்களை பாடசாலை செல்லவும், மீள வீடு திரும்பவும் பேருந்துகள் ஏற்றாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்புக்களிடமும் முறையிட்டும் வீதியை மறித்து போராட்டம் செய்தும் இதுவரை சரியான தீர்வுகள் எட்டப்படாத நிலை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் பாடசாலை மாணவர்கள் பருவகால சிட்டைகளை பெற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் நிலை தொடர்வதால் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்
இந்நிலையில் கடந்த (13.03.2023) அன்று பாடசாலையில் பரீட்சை நடைபெற்ற நிலையில் மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையில் வீதியில் அந்தரித்துள்ளனர்.
இதனையடுத்து மாங்குளம் பொலிஸாருக்கு, ஊடகவியலாளர் ஊடாக இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு போக்குவரத்து பொலிஸ் ஊழியர் ஒருவர் வரவழைக்கப்பட்டு காலை 8.12 மணிக்கு வீதியில் வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனை நோக்கி சென்ற பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முறைப்பாடு பதிவு
இந்நிலையில் குறித்த விடயம் கடந்த 13.03.2023ஆம் மற்றும் 14.03.2023 ஆகிய தினங்களில் குறித்த விடயம் செய்திகளாக வெளிவந்திருந்தது.
இதன் பின்னணியில் கடந்த 15.03.2023 அன்று இரவு 8.47 மணிக்கு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனால் நேற்று முன் தினம் (16.03.2023) மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.