முல்லைத்தீவில் குடியேற்ற உத்தியோகத்தரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (Photo)
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தரால் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் ஒருவர் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
''தனது ஊழல்களை உன்னால் எதுவும் செய்ய முடியாது, தேவையற்ற விதத்தில் தனது விடயங்களில் தலையிடாதே'' என்று அச்சுறுத்தியதாக ஊடகவியலாளரால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய அரச காடழிப்பு சம்பவங்களைச் செய்தி அறிக்கை செய்ததாகச் சந்தேகித்தே குறித்த ஊடகவியலாளரைக் குடியேற்ற உத்தியோகத்தர் அச்சுறுத்தியதாக ஊடகவியலாளரால் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரச்சினைகளுக்கு தீர்வை
தகவலறியும் சட்டம் மூலம் தன்னால் கோரப்பட்ட தகவல் கோரிக்கையினாலேயே குறித்த குடியேற்ற உத்தியோகத்தர் தொலைபேசி எடுத்து அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலங்களாகக் குத்தகை அடிப்படையில் காணி வழங்கல் மாந்தை கிழக்கில் அதிகரித்துக் காணப்பட்ட போதிலும், குறித்த பகுதியில் வயற்காணி அற்று 574 குடும்பங்கள் இருப்பதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குத்தகை அடிப்படையில் காணி வழங்க முன்னர், கிராமங்களில் வசிக்கும் வயற்காணி அற்ற மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை கண்டு அதன் பிறகு குத்தகை முறைமையை நடைமுறைப்படுத்துமாறு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகள் பல்வேறு அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கத்து.
காணிகளை வழங்க தீர்மானம்
இதேவேளை, குத்தகை அடிப்படையில் காணி பெறுவோர் கேட்கும் அளவை விட மேலதிக காணிகளை அபகரிப்பதாகவும், அதனைத் தடுத்து, குத்தகை அடிப்படையில் கேட்கும் அளவை விட மேலதிக காணிகள் வைத்திருந்தால் (அனுமதி அளிக்கப்பட்டவற்றை விட மேலதிகமாக) அவற்றினை வயற்காணிகள் அற்ற மக்களுக்குப் பகிர்ந்தளிக்குமாறு பிரதேச பிரதிநிதிகளால் கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததும், அதன் பிறகு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் காணிகளற்ற மக்களுக்கு மேலதிக கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை மாந்தை கிழக்கில் சட்டவிரோத காடழிப்பு என 07-10-2022 அன்று பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரால் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அதே இடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர், நட்டாங்கண்டல் பொலிஸாரினால் 27-10-2022 அன்றும், பிறிதொரு நாளில் மற்றுமொரு ஊடகவியலாளரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.