குமணன் மீது நீண்டநேர விசாரணை.. தலைதூக்கும் TIDயின் அடக்குமுறை
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) இன்று கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் விசாரணை செய்யப்பட்டதாக ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் குறித்து சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர் குமணன் தெரிவிக்கையில், "விசாரணை 6 மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்தது, மேலும் எனது பத்திரிகை மற்றும் புகைப்பட வேலை, சமூக ஊடக நடவடிக்கைகள், நிதி பதிவுகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வெளிநாட்டு வருகைகள் ஆகியவை மீது குறித்த விசாரணைகள் இடம்பெற்றன” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர் அச்சுறுத்தல்கள்..
அதேவேளை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தொடர் அழுத்தம் மற்றும் அடக்குமறை இருந்தபோதிலும் உண்மை அடிப்படையிலான அறிக்கையிடலைத் தொடருவேன் எனவும் அவர் கூறியதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகவியலாளர் குமணனுக்கு எதிராக விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை ஊடகவியலாளர்களை, குறிப்பாக உள்நாட்டுப் போர் மற்றும் அதன் பின்விளைவுகளுடன் தொடர்புடைய முக்கியமான பிரச்சினைகள் குறித்து செய்தி வெளியிடுபவர்களை துன்புறுத்தும் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகும் என்று ஊடக உரிமைகள் அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திர அமைப்புகளின் கூட்டணி, பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ), எல்லைகளற்ற நிருபர்கள் (RSF), சர்வதேச பத்திரிகை நிறுவனம் (IPI), FORUM-ASIA, சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம் (ICJ) ஆகிய அமைப்புக்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
உரிமை மீறல்கள்
குறித்த அறிக்கையில், குமணனுக்கு எதிரான பழிவாங்கல்களை நிறுத்தி, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அழைப்பாணையை திரும்பப் பெறுமாறு இலங்கையை வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) போன்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் காரணம் காட்டி, இலங்கை மீதான மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) கண்காணிப்பு ஆணையை புதுப்பிக்குமாறு குறித்த அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திடம் (UNHRC) கோரியுள்ளன.
"சர்வதேச சமூகம் இலங்கையில் நடந்து வரும் அனைத்து மீறல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளையும், குறிப்பாக போர் தொடர்பான குற்றங்கள் குறித்து பேசுபவர்களை அடக்குவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், இந்த ஆண்டு இறுதியில் ஜெனீவாவில் நடைபெறும் UNHRC இன் 60ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் பதிவு மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
