ஜோசப் ஸ்டாலினின் விளக்கமறியல் நீடிப்பு! நீதவான் திலிண கமகே உத்தரவு
கோட்டைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் நீண்ட அலைச்சலின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கடந்த மூன்றாம் திகதி மாலை கைது செய்யப்பட்ட ஸ்டாலின், நேற்று(04) பகல் முழுவதும் பல்வேறு அலைச்சல்களுக்கு பின்னர் மாலை கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கோட்டை நீதவான் திலிண கமகேவியின் வீட்டில் வைத்து ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
ஜோசப் ஸ்டாலின் கைது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை |
அதன்போது நேராக நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துப் போகாமல் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் சற்று நேரம் தாமதிக்க வைக்கப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து எதிர்வரும் 12ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திலிண கமகே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று(05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொதுச் செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,சர்வதேச ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கவாதியான ஜோசப் ஸ்டாலினை மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் அரசு கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதை கண்டித்து இப்போராட்டம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு முன்பாக நடக்கிறது.
அவசரகாலச் சட்டம்
அறவழி பேராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போராட்டக்காரர்களை அவசரகாலச் சட்டத்தின் மூலமாக நசுக்குவதற்கு இந்த அரசாங்கம் முற்பட்ட வேளையில் அவர்களுக்காக குரல் கொடுத்தமைக்காக எமது பொதுச் செயலாளர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க சர்வதேச சட்டங்களான ஐ.சி.சி.பி எனப்படுகின்ற சட்டத்தினை மையமாக வைத்துக் கொண்டு கூறினார். இதற்கு நான் உடந்தையாக இருப்பேனே தவிர எதிராக இருக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இச்சட்டங்களையெல்லாம் மீறி எமது பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய கைது நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் ''இந்தஅரசாங்கம் தற்போது தனது பாசிச முகத்தைக் காட்டி இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது. உண்மையில் எங்கள் ஜோசப் ஸ்டாலின் நேர்மையானவர்.
அத்தோடு மக்களின் உரிமைக்காகப் போராடியவர். இவர் சகல இனமக்களும் நிம்மதியாக வாழ வேண்டுமென்பதற்காகவே குரல் கொடுத்த அறவழிப் போராளி. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரியாசனத்தில் அமர பொதுச் செயலாளரும் காரணமாக இருந்திருக்கிறார் இதனை ஜனாதிபதி மறந்து செயற்படுகிறார்.
இந்த நிலையில் பொதுச் செயலாளர் உட்பட ஜனநாயக ரீதியில் போராடிய நிலையில் கைதான அனைவ ரையும் உடனடியாக ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
செய்தி: குமார்
இதேவேளை,இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட அரகல
போராட்டக்காரர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.