கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராயும் இலங்கையும் பாக்கிஸ்தானும்
கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராய்வதற்கு இலங்கையும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன.
நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நிலையான கடல்சார் வளர்ச்சி மூலம் பிராந்திய இணைப்பை வலுப்படுத்தவும் இந்த இணக்கம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பாகிஸ்தான் கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜுனைத் அன்வர் சவுத்ரி ஆகியோருக்கு இடையே இஸ்லாமாபாத்தில் நடந்த சந்திப்பின் போது இந்த புரிதல் எட்டப்பட்டுள்ளது.
நீலப் பொருளாதாரம்
நீலப் பொருளாதாரம் இரு நாடுகளுக்கும் பரந்த ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் ஜுனைத் சவுத்ரி இதன்போது வலியுறுத்தினார்.

உலகளவில் கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் கடல்சார் தொழில்களைச் சார்ந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் 1,000 கிலோமீட்டர் கடற்கரையை ஒரு முக்கிய பொருளாதார சொத்தாக கொண்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.
அத்துடன், நாட்டின் பொருளாதார அடித்தளத்தை பன்முகப்படுத்த கராச்சி போன்ற பகுதிகளில் துறைமுகக் கப்பல்கள், பொழுதுபோக்கு மீன்பிடித்தல், படகுப் பயணம் மற்றும் கடல்சார் பாரம்பரிய சுற்றுலாவை அரசாங்கம் தீவிரமாக ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
நோக்கம்
கல்பிட்டி, திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிராந்தியங்களில் சுற்றுச்சூழல் நட்பு சுற்றுலா மண்டலங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மூலம் அதன் கடலோரப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இலங்கையின் கடல்சார் சுற்றுலாத் திட்ட வரைபடத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் ரத்நாயக்க இதன் போது தெரிவித்தார்.

பாக்கிஸ்தானுடனான கூட்டாண்மை, பிராந்திய சுற்றுலா போக்குவரத்தை விரிவுபடுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கடல்சார் மற்றும் கலாசார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் Cineulagam