அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டம்: இன்று கூட்டு எதிர்க்கட்சிகள் சந்திப்பு
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டமொன்று இன்று (23.07.2026) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இக்கூட்டத்தில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதுடன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத சகல எதிர்க்கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையானது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவதானம் செலுத்தப்படவுள்ள விடயம்
இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் சிவில் மற்றும் அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களை உருவாக்குவது தொடர்பில் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அரசின் இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்துச் செயற்படுவது குறித்துக் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தொலைபேசி வாயிலாகத் தனித்தனியாகக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.