பிரித்தானியாவில் முடக்கம் அமுலாகின்றதா? - பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு
பிரித்தானியாவில் கோவிட் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் வழக்குகள் 22 ஆக உயர்ந்துள்ள போதிலும் மற்றுமொரு முடக்கம் சாத்தியமில்லை என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனவரி மாதம் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நோக்கத்தை போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒமிக்ரோன் திரிபு குறித்த அச்சம் தலைதூக்கியுள்ள நிலையில், பிரித்தானியாவில் 22 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Barnet 2 (new), Brentwood 1, Camden 2 (1 new), Haringey 1 (new), Liverpool 1 (new), North Norfolk 1 (new), Nottingham 1, Sutton 1 (new), Wandsworth 1 and Westminster 2 (1 new) ஆகிய பகுதிகளில் ஒமிக்ரோன் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், ஸ்காட்லாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒன்பது வழக்குகளில், லனார்க்ஷயரில் ஐந்து வழக்குகளும், கிரேட்டர் கிளாஸ்கோவில் நான்கு வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இன்றைய தினம் பிரித்தானியாவில் மொத்தம் எட்டு பேருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது.
தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிழக்கு மிட்லாண்ட்ஸ், கிழக்கு இங்கிலாந்து, லண்டன் மற்றும் வடமேற்கு ஆகிய இடங்களில் ஒமிக்ரோன் வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.
"இந்த மாறுபாட்டின் பரவல், கடுமையான நோய், இறப்பு, மற்றும் தடுப்பூசி செயல்திறன் ஆகியவற்றின் விளைவைப் புரிந்துகொள்வதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடர்கிறோம் என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜென்னி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
"இந்த புதிய மாறுபாட்டிற்கு எதிராக எங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த தடுப்பூசி மிகவும் முக்கியமானது - தயவுசெய்து உங்கள் முதல், இரண்டாவது, மூன்றாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை தாமதமின்றி பெற்றுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.