ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் சுரேஷ்- ஜீவன் தொண்டமான் வாழ்த்து
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலையகத் தமிழ் மக்களை இலங்கைச் சமூகத்துடன் முழுமையாக ஒன்றிணைப்பதை மேற்பார்வையிடுதல் மற்றும் நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய்தல் ஆகிய பொறுப்புகளும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியால் பொறுப்பு
அப்பணிகளையும் அவர் சிறப்பாக முன்னெடுப்பார் என நம்புகின்றேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலையக அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக செயற்படும் எமது சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஜனாதிபதியால் இப்படியான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அவரால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு எனது அமைச்சு பக்கத்தில் இருந்து ஏதேனும் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில், அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.