உக்கிரம் அடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: மனிதாபிமான பேரழிவு - ஐக்கிய நாடுகள் தலைவர் கவலை
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு பலியாகும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் கடந்த சில வாரங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,200 கடந்துள்ளதாக காசா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் "ஒரு மனிதாபிமான பேரழிவை" தடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபை அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித இடப்பெயர்வு
பலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்துள்ள பகுதிகளிலும், காசா முழுவதும் இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதல் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் ஐ நா தெரிவித்துள்ளது.
அத்துடன் தெற்கு நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல் மிகப்பெரிய அளவிலான மனித இடப்பெயர்வுக்கு வழிவகுக்கும் என ஐ நா எச்சரித்துள்ளது.
கசாவிலிருந்து சுமார் 18.7 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடப்பெயர்ந்துள்ள நிலையில், ஏற்கெனவே குறைவாகக் கிடைக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதி போன்றவை இந்தத் தாக்குதல் காரணமாக மேலும் பாதிக்கும் எனவும் ஐ நா எச்சரித்துள்ளது.
காசாவில் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,248ஆக அதிகரித்துள்ளதுடன், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் 7,600க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.