சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரம்: நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜீவன்
சப்ரகமுவ (Sabaragamuwa) மாகாணத்திற்குறிய தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அதே மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அந்த மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களால் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஜனாதிபதிக்கு தெரிவிப்பு
இது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான், குறித்த ஆசிரியர்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
"மலையக கல்வி வளர்ச்சியில் ஆரம்ப காலம் முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்வாங்காத செயற்பாடுகளை செய்து வருகின்றது.
அதனடிப்படையில், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் காணப்படும் பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறையை தீர்க்க, இந்த மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உரிய பாடசாலைகளுக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதற்கமைய, விரைவில் உரிய தீர்வு பெற்று தரப்படும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |