பல்வேறு நிவாரண நடவடிக்கைகளுடன் நாட்டில் களமிறங்கியுள்ள ஜப்பானிய குழு
சமீபத்திய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர மருத்துவ சேவையை வழங்குவதற்காக, ஜப்பானின் பேரிடர் நிவாரணக் குழு, சிலாபம் பொலிஸ் மைதானத்தில் முழு வசதியுடன் கூடிய நடமாடும் கள மருத்துவமனையை நிறுவியுள்ளது.
டிசம்பர் 4ஆம் திகதி முதல் இயங்கி வரும் இந்த மருத்துவமனை, டிசம்பர் 15ஆம் திகதி வரை தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை சிலாபம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்கிறது.
வெள்ளத்தால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனைக்கு துணையாக, இது தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்கிறது.
மருத்துவ நடவடிக்கைகள்
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அவசரகாலத்தின் போது ஜப்பான் அரசாங்கமும் ஜப்பானின் பேரிடர் நிவாரணக் குழுவும் விரைந்து செயற்பட்டமைக்காக அவர் இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார். மேலும் இந்த குழுவின் வருகை உள்ளூர் மீட்பு முயற்சிகளுக்கு மிகவும் அவசிய ஆனது என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வின்போது, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இஸோமாட்டா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி கலாநிதி. ராஜேஷ் சம்பாஜிராவ் பண்டவ் உட்பட பல முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.
ஜப்பானின் பேரிடர் நிவாரணக் குழுவில் நிபுணத்துவ மருத்துவர்கள், தாதியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 31 மருத்துவப் பணியாளர்களும், தளவாட ஆதரவுக்கான 15 உறுப்பினர்களைக் கொண்ட துணை குழுவும் உள்ளடங்கி உள்ளனர்.